செவ்வாய், 12 டிசம்பர், 2017

கந்துவட்டி...

காரிருள் 
மேகம் சூழும்,
கழுத்தை 
பிடிக்க பார்க்கும்.
வெறுமை
மெல்ல புகைக்கும். 
வேற்றுமை 
புகைந்து வலுக்கும்,

நிழல்கூட 
நில்லாது விலகும்,
நிம்மதி 
அடியோடு இழக்கும்,
சில முகங்கள் 
முகத்திரை மாறும்,
சில  முகத்திரை 
முட்டிக்  கிழியும்,

நொடிகள் 
கடக்க யுகங்களாகும்,
நிமிர்நடை 
நொடிந்து போகும்.
இதழ்கள் 
திறக்க மறுக்கும்.
இமைகள் 
மிரண்டு திறக்கும்.

கால்கள்,
நில்லாது பறக்கும்,
கரங்கள்,
உதவாது விரிக்கும்.
கண்கள்,
காணாது சிவக்கும்.
செவிகள் 
கேளாது மடுக்கும்.

உறக்கம்,
தொலைந்தே போகும்,
உண்மை 
உறைந்தே சாகும்,
ஊர்மெச்ச,
வாழந்த உள்ளத்தில்,
உயிர்பயம்,
புற்றாய்  வந்துசேரும்.

செல்வம்,
காணாது போகும்,
மக்கள்,
தெருவோரம் சேரும்,
ஈட்டிய 
பெயரும் மண்ணாகும்,
எல்லாம்,
வட்டிக்கே ஈடாகும்...

கந்துவட்டி...
நமக்கெல்லாம்,
கல்லறை வழிகாட்டி...
கந்துவட்டி...
நமக்கெல்லாம்,
கல்லறை வழிகாட்டி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக