ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

மீசை...(5)

வகுடெடுத்து,
தலைசீவி,
பூவைக்கும்,
கார்க்கூந்தலினும்,
மேலானது,
விரல்கட்டு நாற்றை,
பற்றி சுழட்டும்,
ஆணின் சிறுதிட்டு,
மீசை...

சனி, 29 செப்டம்பர், 2018

மீசை...(4)

இதழ்களை,
தைக்கும்,
மோகமுள்...

மீசை...(3)

முத்தத்தை,
ஊக்குவிக்கும்,
காமஊசி...

மீசை...(2)

மெல்லினமும்,
வல்லினமும்,
நீண்டே இருப்பதால்,
வெட்ட வெட்ட,
நீண்டுகொண்டே 
இருக்கிறதோ,
யாரறிவார்???

மீசை...

மூன்றாம்பிறை மேலுதட்டில்,
பயிர்களேனோ துளிர்க்கவில்லை...
முகக்காட்டில் தேடிப்பார்த்தும்,
விடைகளேனோ தெரியவில்லை...

பருவநீர் வார்க்கும்வரை,
காத்திருக்க வேண்டுமா???
கரடுகளில் உயிரூட்ட 
உரம்போட்டால் தீருமா???

அணிகலனில்லா ஆண்களுக்கு,
இயற்கையின் ஆபரணமா???
காளைகளின் திமில்பிடிக்கும்
வீரத்தின் அடையாளமா??

காத்திருப்பேன் நான்...
காத்திருப்பேன் நான்...
விதையுடைத்து,
உயிர்தெழுந்துவா...

துளிர் மீசையோ???
கட்டை மீசையோ???
முறுக்கு மீசையோ???
நரைத்த மீசையோ???
பாரதியாக ஆசையெனக்கு...
மீசையிலாவது...!!!
அவன் மீசையிலாவது...!!!

வியாழன், 27 செப்டம்பர், 2018

மரகதக்கால்!!!

என்ன அழகடா???
கடற்கரையில் முதன்முதலாய்,
அவள் கால்கள் நடக்கையில்....

மணல்  உள்வாங்கி முதல் முத்தமிட்டது...
பூமாதேவியே சற்று கிறங்கிப்போனாள்...

கோபங்கண்ட பேரலையோ? 
கால்களில் தழுவி மணலை விரட்டியது...
கடல் ராசாவாயிற்றே!!!

வாயுவும் தன் பங்கிற்கு, சூறைக்காற்றாய்,
கால்களை சுற்றி மணலை சுழற்றி போட்டான்...
வாயுவும் ஆண்மகனே!!!

வானமும் நெருப்பும் பாவம் செய்தவர்கள்...
தீண்டாமை குறை அன்று தீயிற்கு தெரிந்தது...
தலைமேல் நிற்கும் அகங்காரம் வானுக்கு புரிந்தது...

என்ன வியப்படா...???
பூமிக்கும், நீருக்கும், காற்றுக்கும், 
வந்த சோதனை????
இவர்கள் ஒற்றுமை, 
ஒவ்வோர் காலடியில் 
காணாமல் போயிற்றே!!!!

பஞ்சபூதமும் கொஞ்சதூண்டிடும்,
மனிதக்கால்களா இவை???
இல்லை இல்லை மரகதகால்கள்....
அவை மரகதகால்கள்...
உன்னடி காண...  
வாடி ராசாத்தி...
                - ஜெகதீசன் பிரபாகரன் 

புதன், 26 செப்டம்பர், 2018

சொல்ல விரும்பவில்லை...

அந்திசாயும் நேரமொன்று,
அரிதாரம் பூசினின்று,
காய்ந்தவயிற்று கோலமென்று,
இரைதேடும் கிளிகளிங்கு...

பசித்த பருந்தொன்று,
பட்டென வந்துநின்று,
சொல்லும் விருந்தென்று,
களவாடும் பசிகொண்டு...

கூக்குரலிடுவோர் உளரோ???
குறைதீர்ப்போர் உளரோ???
சங்கமிலா கூட்டமொன்று,
சகதியில் கலந்த நன்னீராய்...

இனமொன்று வாழுதடா இந்நாட்டில்,
பெயர்கூட சொல்லுதடா பண்பாட்டில்,
"மொழி" முதலெழுத்தா???
அவள் தலையெழுத்தா???
நாவில் நீண்டொலித்தா???
சீதை சிதிலமடைந்து சேர்ந்தபின்,
உறைந்ததடா அவள் உதிரம்,
பெயர்சொல்லி அழைத்தபின்...
பெயர்சொல்லி அழைத்தபின்...