சனி, 5 ஏப்ரல், 2014

முரட்டுக்காளை!!!

விஜயன், என் பெயர். என்னை பற்றி சொல்லும் முன், நான் பிறந்த தஞ்சை மாவட்டத்தை பற்றி சொல்வது அவசியம். வீரத்திற்கு பெயர் போன நகரம், தஞ்சாவூர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். தஞ்சன் என்றால் அசுரன் என்று பொருள். விஷ்ணு பெருமான், தஞ்சனை அழித்த இடம் என்பதால், தஞ்சாவூர் என பெயர் பெற்றதாய் ஆன்மீகவாதிகள் நம்புவதுண்டு. கரிகாலன் தன் அரச பீடத்தை, பூம்புகார் கடலில் மூழ்கும் என நினைத்து, இங்கே தஞ்சம் புகுந்ததால் தஞ்சாவூர் என் பெயர் பெற்றதாய் அரசியல் வல்லுனர்கள் கூறுவர். முத்தரையர் மன்னன், ஸ்வரன் மாறனால் உருவாக்கப்பட்ட நகரம் இது.சோழனும், பாண்டியனும், விஜயநகர பேரரசுகளும் ஆண்ட பூமி இது. மதுரை, தஞ்சை நாயக்கர்கள் வாழ்ந்த சுவடுகள் இன்னும் மறையவில்லை.

வீரம் மண்ணில் இருப்பதால் தான் என்னவோ? இங்கு விளையும் நெல்லுக்கும் ராஜராஜன் என்று பெயர் உள்ளது. அப்படிப்பட்ட மண்ணில் பிறந்த எனக்கும் வீரம் இருப்பதில் ஆச்சர்யங்கள் ஏதும் இல்லை. அந்த வீரம் தந்த பரிசு தான் இந்த சிறைச்சாலை. இன்று மாலை என் விடுதலை. இந்த சிறையில் நான் கழிக்கும் கடைசி நிமிடங்கள் இவை. செய்பவை அனைத்தும் தவறென தெரியாது, செய்யும் முன். அதுபோல தான் எனக்கும். நான் செய்தவை எவையும் திட்டமிட்டு செய்தவை அல்ல, எதிர்பாராமல் நிகழ்ந்தவை. சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் எனக்கு எதிராக அமைந்துவிட்டன. விளையாட்டாய் மஞ்சுவிரட்டில் தொடங்கி, மரணம் வரை சென்று விட்டது என வாழ்க்கை. மஞ்சு விரட்டில் பங்கேற்பது பாரம்பரியமாய் தொடர்ந்து வரும் ஓர் வழக்கம். காளையை பந்தயத்தில் விடுவதும், காளை அடக்குவதும் இரண்டும்தான்.

என் ஊர் கடந்தான்குடி, பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள சிறிய கிராமம். என் வீட்டிலும் ஓர் காளை இருந்தது. காங்கேயம் காளை, புளிகுலம் வகையறாவை சேர்ந்தது. இந்த வகை காளைகள் தான் எதிரியை எதிர்த்து நின்று தாக்கும். காங்கேயம் காளைகளை புலியும், சிங்கமும் கூட, எதிர் நின்று தாக்க அஞ்சும். திரைப்படங்களில் வருவதைப்போல் காங்கேயம் காளைகளை எதிர் நின்று அடக்கியவர் எவரும் இல்லை. ஆண் கன்று பிறந்தவுடம், சீம்பாலை கறந்து மனிதர்கள் உண்டுவிடும் இக்காலத்தில், மஞ்சுவிரட்டுக்கு காளைகளை வளர்ப்பவர்கள் இதனை செய்யமாட்டார்கள். தினமும் பருத்தியும், புண்ணாக்கும் தருவதோடு, கரும்புகளும் உணவாய் தந்து வளர்ப்பதுண்டு. 6 மாத காலம் ஆனா பின்பு, கன்றை குளத்தில் விட்டு, நீச்சல் பழக விடுவது வழக்கம். இது காளைகள் நன்கு கட்டுகோப்பாக வளர உதவும். பொதுவாக 15 முதல் இருபது வருடங்கள் வரை வாழும் ஒரு காளை, மூன்று வயது ஆனவுடம், சிறிய மஞ்சுவிரட்டிற்கு விட்டுவிடுவார்கள். 3 முதல் 13 வயது வரை காளைகள் மஞ்சு விரட்டில் பங்கேற்கும்.

என வீட்டில் பிறந்த ஆண் கன்றுக்கு, நான் தான் பெயர் சூட்டினேன், ஐயனார். என் ஊர் ஐயனார் சாமியின் பெயரை வைத்தேன். காரணம், ஐயனாரை கண்டால் திருடனும் அஞ்சுவான் என்று பாட்டி சொல்ல கதைகள் கேட்டதுண்டு. அதுபோல் என் ஐயனாரை கண்டால் அனைவரும் அஞ்ச வேண்டும் என்று நினைத்தேன். ஐயனார் பிறந்தபோது எனக்கு 13 வயது. தினமும் காலை எழுந்தவுடன் மறக்காமல், அய்யனாரிடம் பேசிவிட்டுத்தான் மற்ற வேலைகள். ஐயனார் படு சுட்டி, என் வீட்டு தோட்டத்தை 5 நிமிடத்தில் 50 முறை சுற்றிவந்துவிடுவான். அவனை பிடிக்க முற்பட்டு ஒவ்வொரு முறையும் தோற்ப்பது தான் வாடிக்கை. முதல் 3 மாதம் வெறும் பால் மட்டும் தான் அவன் உணவு. பிறகு மெல்ல புண்ணாக்கும், தவிடும் சேர்ந்த நீரை பருக ஆரம்பித்தான்.

வருடா வருடம் எங்கள் ஊர் திருவிழாவில், மஞ்சு விரட்டு நடப்பது வழக்கம். வருடம் தவறாமல் அதை காண சென்றுவிடுவேன். அப்படிதான் ஐயனார் பிறந்த அந்த வருடம், நான் என் சக நண்பர்களோடு மஞ்சு விரட்டு காண சென்று இருந்தேன். பொதுவாக சிறு பிள்ளைகளை வேடிக்கை பார்க்க அனுமதிப்பதில்லை, அதனால் அருகில் இருந்த ஆலமரத்தில் ஏறி கிளையில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தோம். அந்த வருடம் நடந்த போட்டியில் அணைத்து காளைகளும் தோற்று விட்டன. காலையின் கொம்பில் இருக்கும் துண்டை அவிழ்த்தால் வெற்றி. அணைத்து காளைகளின் கொம்பில் கட்டப்பட்டு இருந்த துண்டுகளையும் அவிழ்த்துவிட்டனர் என் ஊர் இளங்காளைகள். விழா முடிந்தவுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. பக்கத்துக்கு கிராமங்களிலிருந்தும் வந்து வெற்றி பெற்று சென்றனர். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பன், என்னிடம் நாளை உன் ஐயனாரும் இப்படிதான் தோற்ப்பான், என்றான். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று இரவு முழுவதும், என் நண்பன் கூறிய வார்த்தைகள் என்னை உறங்க விடாமல் செய்துவிட்டது.

மறுநாள் விடிந்தவுடன், நேராக அய்யனாரிடம் சென்று வேண்டிக்கொண்டேன், என் ஐயனாரை எவரும் தோற்கடிக்க கூடாது என்று, மஞ்சு விரட்டில். கோவில் பூசாரி என்னிடம் "என்னடா விஜயா? காலைளியே பலமா வேண்டிகிட்டு இருக்க?" என்று கேட்டார். நானோ ஏதும் சொல்லாமல் ஓடி சென்று ஐயனாரின் நெற்றியில், பூசாரி தந்த விபூதியை பூசினேன். பிறகு எனக்கு நானே சொல்லிகொண்டேன், "இனி என் ஐயனாரை எவனாலும் ஜெயிக்கமுடியாது" என்று. இதை கேட்ட ஐயனாரும் தலை ஆட்ட எனக்குள் புதிதாய் ஓர் நம்பிக்கை பிறந்தது.

நாள் தவறாமல் ஐயனாரை கவனித்துக்கொள்ள ஆரம்பித்தேன். வார விடுமுறை நாட்களில் குளத்தில் சென்று அய்யனாருக்கு நீச்சல் பழக கற்றுக்கொடுத்தேன். இப்படி நாட்கள் சென்று கொண்டே இருந்தது. ஊரில் அனைவரும் என்னை "இவன் மாடு தான் மேய்க்க போறான்னு" கேலியாய் பேசினார்கள். ஐயனார் 3 வயது ஆனவுடன் அதற்க்கு மூக்கனாங்கயிறு போட்டார்கள். அவன் திமிரியதை கண்டு சற்று பயந்து விட்டேன். சக நண்பர்கள் 10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார்கள், நானோ என் ஐயனாரை எப்படியாவது அடுத்த வருட ஜல்லிக்கட்டில் விட வேண்டுமென்று எண்ணிகொண்டிருந்தேன். அதற்காக அவனை தயார் செய்து, அய்யனாருக்கு லாடம் அடித்து, அவன் கொம்புகளை சீவி விட்டு, பயிற்சிகள் தொடங்கினேன்.

முதலில் ஐயனாரை கட்டி வைத்து, அவன் எதிர் நின்று, சீண்டினேன், பதிலுக்கு அவனும் சீண்டினான். நான் தலை அசைக்க, அவனும் தலை அசைத்தான். நான் முன்னும் பின்னும் செல்ல அவனும், முன்னும் பின்னும் சென்று சீறத்தொடங்கி புது உற்சாகம் அளித்தான். இதேபோல் பயிற்சிகள் தொடங்கின. பிறகு அவன் திமிலை பிடித்து அவனை அடக்க முயற்சித்தேன். சட்டேன்று அவனோ என்னை தூக்கி எறிந்துவிட்டான். எனக்கோ சிறிது காயம் கையில். அனால் என் ஐயனார் முழவதும் தயாரானதை கண்டு என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாட்கள் நகர நகர, என் ஐயனார், கம்பீரமாய் நிற்க தொடங்கினான். திமிலை அசைத்து, தலையை ஆட்டினால், எனக்கே சில சமயம் அவன் அருகில் செல்ல பயமாய் இருக்கும்.

ஊர் திருவிழாவும் வந்தது. அவன் முதன் முதலில் போட்டியில் பங்கேற்றான். காளையின் உரிமையாளர்கள், போட்டி தொடங்குமுன், பரிசுத்தொகையை அறிவித்து தான், காளையை அவிழ்த்துவிடுவார்கள். நான் ஐயனாரும் மேல் இருந்த நம்பிக்கையில், நான் அணிந்திருந்த என் மோதிரத்தையும், சங்கிலியையும் பரிசுப்பொருளாய் அறிவித்தேன். ஐயனார் சீறி பாய்ந்து புறப்பட்டான், சில காளைகள் அவனை அடக்கி பரிசை தட்டி செல்ல முற்பட்டார்கள். ஐயனாரின் திமிலை சிலர் பிடித்து அடக்க முயற்சித்தவர்களை தூக்கி எறிந்தான். எதிரே வந்தவர்களை, மின்னல், மேகத்தை கிழிப்பது போல், கிழித்தான். 50க்கும் மேற்பட்டோர் முயன்றும், பிடிக்க முடியாமல் தோற்றனர். எவரும் அடக்க முன்வராமல் பந்தயக்கூடத்தில், தனியாய் வெற்றியுடன் நின்றான். மகிழ்ச்சியில்  நானும் கம்பீரமாய் நின்றேன்.

போட்டியை பார்த்த கார்மேகம் என்ற ஒருவர், என்னிடம் அன்று மாலை ஐயனாரை விற்று விடுமாறு கூறினார். நான் முடியாது என்றேன். காளையை கேட்டவர், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துபர், இப்படி ஒரு காளையை பார்த்ததில்லை என்றும் சொன்னார். நானோ முடியாது என்று மறுத்து கூறிவிட்டேன். வரிசையாய் அடுத்தடுத்து நடந்த 3 வருடமும், ஐயனார் போட்டியில் வெற்றி பெற்றான். மூன்று வருடமும் ஐயனாரை வாங்க நினைத்த கார்மேகம், தோல்வியைத் தழுவினார். அய்யனாருக்கு 7 வயது ஆனது. அவனை, அடுத்த வருடம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் முதன் முதலாக பங்கேற்க வைக்க வேண்டும் என்று நினைத்து அதற்க்கான வேளையில் இறங்கினேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க, முன் அனுமதி பெறுவது அவசியம், 3 மாதத்திற்கு முன்னதாக, போட்டி அமைப்பாளரிடம் விண்ணப்பம் பெற்று, தொகையை செலுத்தி அனுமதி பெறவேண்டும். அனைத்தையும் செய்துவிட்டேன். தை மாதம் 3ஆம் நாள் போட்டி என்று தீபாவளி நாளில் அறிவித்தார்கள். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், அய்யனாருக்கு பருத்தியும், புண்ணாக்கும் அப்படியே வாங்கிக்கொண்டு, வீடிற்கு புறப்பட்டேன்.

வீட்டிற்கு வந்ததும் கொட்டகையை பார்த்த எனக்கு, அதிர்ச்சி. வழக்கத்திற்கு மாறாய் ஐயனாரின், வாயில் லேசாய் நுரை தள்ளி, கீழே விழுந்து கிடந்தான். கூரையில் சொருகி இருந்த குழலில் அரளி விதையின் வாசம். அதிர்ந்து போனேன். மூக்கணாங்கயிறு கட்டி இருந்தாதால், இந்த நாச வேளையில் சிலர் செய்து இருக்கிறார்கள். இல்லையெனில், என்னைத்தவிர எவரையும் நெருங்க விடமாட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் உடனே, தண்ணீரை எடுத்து ஐயனாரின் வாயில் அழுதுகொண்டே ஊற்றினேன். முடிந்த அளவு தண்ணீரை ஊற்றி விட்டு, மிதி வண்டியில் ஏறி, அருகில் இருந்த விலங்கியல் மருத்துவரை அழத்து வர சென்றேன்.

செல்லும் வழி எல்லாம், ஐயனாரை பற்றி தான் நினைத்து கொண்டிருந்தேன். ஒருவழியாய் மருத்துவரை அழைத்து வந்து ஐயானாருக்கு வைத்தியம் பார்த்து அவனை பிழைக்க வைக்க 10 மணி நேரம் போராடினேன். இனி உயிருக்கு ஆபத்து இல்லை என்று, மருத்துவர் கூறுவார் , என எண்ணினேன். ஆனால் மருத்துவர் கைவிட, மனம் நொறுங்கி அழத்தொடங்கினேன். அந்த கயவனை கண்டு பிடித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீயை எரிந்தது, மனதில்.

மறுநாள் ஊர் பஞ்சாயத்து கூடியது, குற்றவாளியை சரணடையுமாறு கூறினார் தலைவர். ஆனால் ஒன்றும் பலன் இல்லை. எவனும் குற்றத்தை ஒப்புக்கொள்ள முன்வரவில்லை. நான் கோபத்தில் அனைவரின் முன்னிலையில், "அவன கண்டு புடிச்சி கொல்லாம விடமாட்டேன் டா, இது என் ஐயனார் மேல சத்தியம்" என்று உரக்க கூறிவிட்டு சென்று விட்டேன். மறுநாள் காலை, காவல்துறையினர் என்னை கைது செய்தார்கள். காரணம் ஊர் ஆற்றங்கரையில், கார்மேகத்தின் வேலையாள் பிணம் இருந்தது. ஊர் மக்களெலாம் என்னை குற்றவாளி என்று தூற்ற, சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் எனக்கு எதிராய் அமைந்தன. 5 வருடம் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பானது. இந்த 5 வருடத்தில், என் வீடு என்ன ஆனதென்று தெரியவில்லை, எந்த செய்தியும் வந்து சேரவில்லை.

இனி... இன்று மாலை, 4 மணி, சிறை மரபுகளை முடித்து, வெளியே வந்தான். சிறையில் 5 வருடம் உழைத்த உழைப்பு வெறும் 3 ஆயிரம் ரூபாய். கையில் எடுத்துக்கொண்டு, ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் சென்றான். பேருந்து செல்ல, செல்ல, சாலை ஓர காட்சிகள் மாறி இருந்தது. வருடங்கள் பலவாகியும் ஐயனாரின் நினைப்பு மட்டும் அவன் மனதை விட்டு அகலவில்லை. பேருந்து கடந்தான்குடி வந்தவுடன், கீழே இறங்கினான். பேருந்து நிலையத்தில் கார்மேகம் நின்று கொண்டிருந்தார். விஜயனிடம், தான் தன் வேலையாள் இடும்பனிடம், அய்யனாருக்கு விஷம் வைக்க சொல்லவில்லை, என்று சொன்னார். விஜயனோ, தனக்கு தெரியும் என்று சொல்லி, நடந்ததை சொன்னான். "இடும்பன், மஞ்சு விரட்டில் அய்யனாரிடம் காயமடைந்தவன். முதல் முறை ஐயனார் போட்டியில் பங்கேற்றபோது, இடும்பனின் வையிற்றை கிழித்தான் ஐயனார். இரண்டு வருடமாய் படுக்கையில் இருந்து மீண்டு வந்தவுடன், ஐயனாரை பழிதீர்க்க நினைத்து இவ்வாறு செய்தான்" என்று விஜயன் கூறினான்.

நாட்கள் சென்றது. விஜயனும், கார்மேகத்திடம், வேலைக்கு சேர்ந்தான். கார்மேகத்தின் மாட்டுப்பன்னையில், புதிதாய் ஓர் பசு ஆண் கன்று ஈன்றது. விஜயன் பெரிதும் மகிச்சி அடைந்தான். அந்நிகழ்ச்சி விஜயனுக்கு ஐயனாரை மீண்டும் நினைவு படுத்தியது. மகிழ்ச்சியில், தான் வைத்திருந்த 3 ஆயிரம் ருபாய் கொடுத்து, அந்த கன்றை வாங்கிக்கொண்டான். இப்போது இந்த முரட்டுக்காளைக்கு, மீண்டும் ஓர் ஐயனார் கிடைத்து விட்டான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக