சனி, 5 ஏப்ரல், 2014

கருவேல நிழலும், கண்ணீர் துளியும்...

இராமநாதபுர மாவட்டம், பேருந்து வசதி இல்லாத மலையோர கிராமம். மழை நீரை சிறிதும் கானா புழுதிக்காடு. அன்றாட வாழ்கையை நடத்த மலையில் கிடைக்கும் கொம்புத்தேனும், சேனைக்கிழங்கும் பெரிதும் உதவியது. ஊரில் மொத்தம் இருபது முதல் முப்பது வீடுகள். அதில் ஒன்று பணக்கார வீடென்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஊரில் உள்ள ஆட்கள் எல்லாம் அருகில் இருந்த செங்கல் சூளையில் வேலை செய்து பிழைப்பை ஒட்டிக்கொண்டிருந்தனர்.

சூரியன் சுட்டெரித்த வறண்ட செம்மண் பூமி. கூரையில் சன்னலுடன் ஓர் பனைஓலை வீடு, சுண்ணாம்பில் குளித்து பளிச்சென்று ஒளிர்ந்தது! பச்சைபசேலென்று தெரிந்தது கருவேலமரம் மட்டுமே!. மூவர்ணகொடியும் இதுபோல் ஒளிர்ந்ததில்லை. வீட்டின் முற்றத்தில் கொதித்து கொண்டிருந்தது வெறும் உலை மட்டுமல்ல, அதை பார்த்துகொண்டிருந்த கண்ணமாளின் வயிறும் தான், பசியில். பிள்ளைக்கு உணவளிக்கும் பதற்றத்தில், பாத்திரம் அவள் விரல்களை சுடுவதை உணராமல் சோறாக்கி கொண்டிருந்தால். கதிர்வேலனை பள்ளியின் மணியோசை கேட்கும் முன், அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

பக்குவமாய் பள்ளிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தான் கதிர்வேலன், ஆரம்ப பாடசாலையில் பயிலும் 2ஆம் வகுப்பு மாணவன். அரசு பள்ளியில் தந்த சீருடை, வருடம் முடியும் முன், அதன் ஆயுட்காலம் முடிந்ததை உணர்த்தியது.சுவர் ஆணியில் தொங்கிய கண்ணாடியில் தலை வாரிகொண்டிருந்தான். சீராய் படிந்த தலைமுடி, நெற்றியில் திருநீர், திவ்யமாய் இருந்ததது அந்த பிஞ்சு முகம். வேலன் என்று பெயர் சூட்ட இதுவும் ஒரு காரணமோ? சுவற்றில் ஒட்டி வைத்திருந்த முருகன் படத்தை பார்த்து வணங்கி நின்றான். வீட்டு பாடத்தை முடிக்கவில்லை, ஆசிரியரிடமிருந்து காப்பாற்ற கேட்டுக் கொண்டிருந்தான். பள்ளியில் இருந்து வந்ததும், மறுநாள் அடுப்பெறிக்க, மலைகாட்டில் சுள்ளிகள் எடுக்க சென்றதால் வந்த வினை இது. வீடு திரும்ப நேரம் ஆனதால், முடிக்க முடியாமல் போயிற்று. சூரியனும் வேலனுக்கு உதவ முன்வரவில்லை. மாலை நேரம் வந்தவுடம் சட்டென்று மறைந்து விட்டான்.

பனைஓலை வீட்டில் மின்சாரம் ஏது? நிலவொளிதான் ஒரே வெளிச்சம். அதிலும் எழுத முற்பட்டவன், பாடத்தை முடிக்க முடியாமல் உறங்கிவிட்டான். அரைகுறையாய் முடித்த பாடத்தை கொண்டு சென்று ஆசிரியரிடம் காண்பித்தால், அம்மாவை அழத்து வர சொல்வார் என்று நினைத்து பயந்தான். கண்ணம்மா சோற்றுச்சட்டியை கொண்டு வந்து உள்ளே வைத்தாள். பிள்ளையை அழைத்தாள் உணவளிக்க. பயத்தில் அவனுக்கு அரை வயிறுதான் இறங்கியது. சுவற்றில் தொங்கிய பையை எடுத்து தோளில் சேர்த்தான். வேகமாய் பள்ளிக்கு புறப்பட முற்பட்டு வீட்டின் வாசல் வழியே வெளியே வந்து நடக்க தொடங்கினான்.

பிள்ளை பள்ளிக்கு சென்றதும், தானும் ஆக்கிய உணவை எடுத்து தூக்குச்சட்டியில் வைத்துக்கொண்டு புறப்பட்டாள் செங்கல் சூளைக்கு. சூளையில் வெந்துகொண்டிருந்த களிமண்ணை, மேலும் வலுப்படுத்த தீயை கொஞ்சம் அதிகம் ஏறியவிட்டார்கள் வேலையாட்கள். பரபரப்பாய் வேலை நடந்து கொண்டிருந்தது, நேரம் 12மணி ஆவதை சூரியன் சுளீர் என்று மேனியை சுட்டு உணர்த்தினான். மரக்கிளையில் தொங்கவிட்ட சோற்றுச்சட்டியை எடுத்து காலை உணவையும், மதிய உணவையும் ஒரே வேலை, சேர்த்து முடித்தாள். வறுமை கற்றுத்தந்த சிக்கனமும் மேலாண்மையும் இதுவோ என்று எண்ணத்தோன்றும்?

காய்ந்திருந்த செங்கற்களை, பிரித்து எடுத்து, எண்ணி வைத்துக்கொண்டிருந்தாள். அப்போது அக்கா அக்கா என்று ஒரு குரல் லேசாய் தழுதழுத்தது. நிமிர்ந்து யாரென்று பார்த்தாள். கதிர்வேலனின் நண்பர்கள் இருவர் பள்ளிசீருடையில் வந்திருந்தார்கள். என்னவென்று தெரிய, அந்த பிள்ளைகளிடம் கேட்டாள். பிள்ளைகள் ஆசிரியர் பள்ளிக்கு அழத்து வரச்சொன்னதை தெரிவித்தார்கள். தயக்கதுடம் தன் முதலாளியிடம் சொல்லிவிட்டு பள்ளிக்கு சென்றாள், ஆசிரியரை சந்திக்க. வழி நெடுகிலும் வேலனின் நண்பர்கள் எதுவும் பேசாமல் மௌனமாய் நடந்து வந்தார்கள், அவளோடு. இந்த மௌனம், அவளின் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. ஒருவழியாய் பள்ளிக்கு வந்து சேர்ந்தார்கள்.

மதியம் 3மணி. பிள்ளைகள் எவரும் விளையாடவில்லை. வழக்கத்திற்கு மாறாய் ஒரு நிசப்தம். பாலர்கள் இருவரும் ஆசிரியரின் அறைக்கு அவளை அழைத்து சென்று நிறுத்தினார்கள். ஆசிரியர் அவளை அழைத்து செய்தியை சொன்னதும் அலறி அடித்து அழத்தொடங்கினாள். காரணம், வேலன் செய்த வினைகள் இவையாவும். ஆம் அந்த கடவுளின் இறக்கம் துளியும் இல்லை வேலன் மீது. பள்ளியில், மனப்பாடம் செய்து வைத்திருந்த குறளை, உரக்க சொல்லும்பொழுது மயங்கி விழுந்தான். விழுந்தவனை, எழுப்ப முயற்சித்தும் பலன் இல்லை. இறுதியில், காலம் தாழ்த்தாமல் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், ஆசிரியரும், 8ஆம் வகுப்பு பிள்ளைகளும்.

மயங்கிக்கிடந்த வேலனை பரிசோதித்த மருத்துவர், எதுவும் புரியாமல் விழித்தார். பள்ளியில் நடந்தவற்றை மௌனமாய் கேட்டறிந்தார். மேல் பரிசோதனைக்கு வேலனை தனி அறைக்கு மாற்றினார். ரத்தஓட்டம் சீராக இல்லாததை அறிந்து கொண்டார். வேலனின் இதயத்துடிப்பை கேட்க, கேட்க அவரின் முகம் கொஞ்சம் மாறியது. பின் வேலனிடம் பேச்சு கொடுக்க துவங்கினார். எல்லா கேள்விகளுக்கும் வேலனிடமிருந்து கிடைத்தது, மௌனம் மட்டுமே. எவ்வளவோ முயற்சித்தும், வேலனை மயக்கத்திலிருந்து விழிக்க செய்ய முடியாமல் தோற்றார்.

கண்ணம்மாளும், ஆசிரியரும் மருத்துவமனைக்கு வந்தனர். வேலனிருக்கும், அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்று சென்றனர். வேலனுக்கு பிராணவாயு செலுத்த பட்டுக்கொண்டிருந்தது. உள்ளே மருத்துவர்கள் பரிசோதித்து கொண்டிருந்தார்கள். முழு உடல் பரிசோதனையில், வேலனின் இதயம் சற்று பலவீனமாக இருந்தது தெரியவந்தது. அதிகம் சிரித்தாலோ, அழுதாலோ? ரத்தஓட்டம் அதிகரித்து மயங்கி விடுவான் என்ற உண்மையை தெரிவித்தார். செய்வதறியாமல் கண்ணம்மாள் மருத்துவரை வணங்கி நின்று, வேலனை காப்பாற்றுமாறு வேண்டினாள்.

மருத்துவர் என்ன கடவுளா? அனைவரையும் காப்பாற்ற? என்ற எண்ணம் எல்லாம் துளியும் இல்லாது, கண்கண்ட கடவுள் இவர் தான் என்று, பெரிதும் நம்பினாள் கண்ணம்மா. வேலனின் இதயம் பலகீனமாக இருப்பதையும், ரத்த அழுத்தத்தை தாங்க கூடிய சக்தி இல்லை என்பதையும் விளக்கிக்கூறினார். மருத்துவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்,  கண்ணம்மாவின் மனதில் இடியாய் இறங்கின. வேலன் மயக்கம் தெளிந்து கண் விழத்தான். கனவோ என்று எண்ணி சிறிது கிள்ளிப்பார்தான், அவனின் கைவிரலை. நிஜம் தான் என்று தெரிந்தது. அருகில் நின்ற தன் அம்மாவிடம் என்ன ஆகிற்று என்று கேட்டான், அவளோ ஏதும் இல்லை என்று சொல்லி அவன் தலையை கோதினாள்.

மாலை நான்கு மணிக்கு, வேலனை வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி கிடைத்தது. வேலனை தோளில் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஆதவன் மறைவது, மற்றொரு விடியலுக்கு என்பதை உணர்த்துவதாய் இருந்தது. ஒற்றையடிப் பாதையில் வீட்டிற்க்கு சென்றடைந்தாள். இதுநாள் வரை வேலனை அழாமல் பார்த்துகொண்டவள், இந்த நொடி முதல் அவனை அதிகம் சிரிக்க விடாமலும் பார்த்துக்கொள்ள தொடங்கினாள். ஆதவன் உதித்தான், மறைந்தான். வீட்டின் முன் வைத்திருந்த தென்னம் பிள்ளை வளர, வளர, வேலனும் வளர்ந்தான், அன்னையின் அரவணைப்பில்.

இதயம் பலவீனமாக இருப்பினும், அவன் எண்ணம் பலமாக இருந்தது. நன்கு படித்து தன்னைப்போல் உள்ளோரை காக்க மருத்துவன் ஆனான். பட்டப்படிப்புடன் தன் குடிசைவீடிற்கு திரும்பிய மகனை கண்ட, கண்ணம்மாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள், இனி கருவேல நிழலில் மெல்ல உலரும் இனிமையாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக