ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

கல்வி...

கரும்பலகையில்,
கைகள்,
எழுதிடும்,
அவரவர்,
விதி...

கால்பந்து...

உதைத்தாடும்,
வீரர்களின்,
ஒரே,
காற்றடைத்த,
உலகம்...

வானூர்தி...

மனிதனை,
பறக்க வைத்த,
அறிவியல்,
பருந்து...

ஆட்டோ...

தடம்மாறிய,
எறும்பின்,
தறிகெட்ட,
முன்பின்,
முரணான,
ஓட்டம்...

ரயில்...

ஓர்திசையில்,
அணிவகுக்கும்,
விஞ்ஞான 
எறும்புகளின்,
சீரான 
பயணம்...

கல்லறை (2)...

இறந்தபின்,
உருவான,
நிரந்தர,
சொந்தவீடு...

கல்லறை (1)...

மண்ணுலகை,
விட்டுபிரிந்த,
குற்றத்திற்கு,
தண்டனை,
தனிமை,
சிறைச்சாலை...

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

நம்பிக்கை...

பல இறகுகள் தானே,
பறவையின் சிறகு...
உயரப்பறந்திட சிறகை,
விரித்திட பழகு...
இந்த வானினை முழுதாய்,
அளவிட வா வா...
அதில் நட்சத்திரங்கள்,
பிடிபடும் வா வா ...

இனி மின்மினி 
வெளிச்சம் 
போதா தென்றால்...?
நிலவை கொஞ்சம் 
சிறை யெடுப்போம்...
அந்த நிலவின்
ஒளியும் 
போதாதென்றால்...?
விண்மீன் கூட்டம் 
பிடித்திடுவோம்....

இந்த இரவுகள் யாவும்,
தொடர்கதை...
மெல்ல விடிந்திட நீங்கும்,
விடுகதை...
இந்த நம்பிக்கை 
ஒன்றேபோதும்,
வாழ்ந்திடத்தான்...
இனி வாழ்கின்ற,
காலம் யாவும்,
வென்றிடத்தான்...

சவப்பெட்டி...

முடிவுறா,
துயில்,
கொள்ளும் 
அறை...

சந்திப்பு!!!

என் விழிகளில்,
நீ வீழ்ந்ததும்...
என் இமைகளும்,
கூட மறந்ததே...

உன் மொழிகளை,
நான் கேட்டதும்,
மெல் இசையினை,
செவி துறந்ததே...

அருகில் வராதே,
சுவாசிக்க மறப்பேனோ???
அருகில் வராதே...
நிலைதவறி வீழ்வேனோ???

புதன், 13 செப்டம்பர், 2017

மனசாட்சி (2)...

பசியால் வாடிய 
வயிற்றின் கண்முன்னே 
வளியவன் உண்டதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

சாலை விபத்தினில் 
சிந்திய உதிரத்தில்,
உதவாது சென்றதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

உரிமை இழந்தவன்,
அழுகுரல் கேட்டினும்,
செவிடனாய் வாழ்ந்ததில்,
வீழ்ந்தது மனசாட்சி...

தம்பிள்ளை வாசிக்க,
ஊர்ப்பிள்ளை வீசியசெய்தி,
தாளினை வாசிக்கையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

பிறர்கூறும் சொல்கேட்டு,
பொய்புரட்டை எண்ணாது,
புறம்பேசிய நாவினில்,
வீழ்ந்தது மனசாட்சி...

மனைவியின் சொல்கேட்டு, 
பெற்றோரை புறந்தள்ளும்,
பிள்ளையின் செய்வினையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

கல்விக்கு விலைவைத்து,
காசுக்கு விற்றிட்ட,
கயவரின் வஞ்சனையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

வாக்கிற்கு பணம்வாங்கி,
வஞ்சகரை தேர்ந்தெடுத்த,
கறைபடிந்த கைகளில்,
வீழ்ந்தது மனசாட்சி...

காதலை பேணாது,
சாதிய கொலைசெய்யும்,
சாக்கடை புழுக்களால்,
வீழ்ந்தது மனசாட்சி...

பெண்ணியம் போற்றாது,
ஆண்மகனாய் வாழாது,
பெற்ற வரதட்சணையில்,
வீழ்ந்தது மனசாட்சி...

கடமையை மறந்திட்டு,
கண்மூடி விலைபேசி,
சன்மானம் கேட்டதில்,
வீழ்ந்தது மனசாட்சி...

நோயுற்ற மனிதரை,
காக்கின்ற சேவைக்கு,
விலைவைத்த மருத்துவரில்,
வீழ்ந்தது மனசாட்சி...

பேருணர்வினில் எழுதிட்ட,
கவிதையை நுகராமல்,,
கடக்கின்ற மூடரால்,
வீழ்ந்தது மனசாட்சி...

எங்கே தேடுவேன்,
வீழ்ந்த மனசாட்சியை...???
எப்படி எழுப்புவேன்,
வீழ்ந்த மனசாட்சியை...???

மனசாட்சி (1)...


விழிமூடி தூங்கியே,.
விடையாவும் தேடட்டும்...

புரிகின்ற வேலையில்,
இமைரெண்டும் விரியட்டும்...

உணர்கின்ற வேலையில்,
உள்ளங்கள் உறையட்டும்...

வழிந்தோடும் கண்ணீரில்,
வன்மங்கள் கரையட்டும்...

மனிதத்தின் மாண்புகள்,
மனதிலே வளரட்டும்...

பிழையான தருணங்கள்,
மண்ணிலே புதையட்டும்...

மனிதனை மாற்றியே,
மானுடம் சிறக்கட்டும்...

மனசாட்சி இவ்வண்ணம்,
உலகினை மாற்றட்டும்...

வியாழன், 7 செப்டம்பர், 2017

அரசியல் போராட்டம்...

வீதியில் இறங்குவார்,
வேடிக்கை பார்ப்பார்,
கூச்சல் இடுவார்,
கும்மாளம் அடிப்பார்...

கைஅசைப்பார், புன்னகைப்பார்,
பார்கேட்க பகுத்தறிவை,
பறைசாற்றுவார்...
பாமரனின் நண்பனென,
நன்நடிப்பார்...

போருக்கு அழைத்திடுவார்,
புறப்பட்டு வாயென்பார்,
சமத்துவம் தானென்பார்,
சதிசெய்து சாகடிப்பார்...

வீதியில் உழைத்திடுவார்,
குடிசையில் கைநனைப்பார்,
கும்பிட்டு கைகுடுப்பார்,
குற்றம் பலசெய்திடுவார்...

பேருக்கொரு ஆணை இடுவார்,
நாற்திசையில்  சிலைவைப்பார்,
பூட்டிட்டு காத்திடுவார், பின்சிலையுடைத்து 
போர்போரென உணர்வெடுப்பார்...

பொதுச்சொத்தை நாசம் செய்வார்,
பொல்லாங்கு இதுவென மோசம்செய்வார்,
பொய்ப்புரட்டில் நால்வர்ணம் பூசிடுவார்.
வெற்றி வெற்றி என ஆர்பரிப்பார்..
வென்றது சனநாயகமென கொக்கரிப்பார்...

கேட்பதும் கிடைக்காது,
சொல்வதும் விளங்காது,
அறிவித்த போராட்டம்,
அரைநாளில் முடிவுறும்.
வெளிச்சம் விழும்முன்,
விட்டிலாய் ஓட்டமெடுப்பார்...
இவர்களல்லவா போராளிகள்!!!
இதுவல்லவா போராட்டம்!!!

செவ்வாய், 5 செப்டம்பர், 2017

புதிய இந்தியா...

மூச்சறுந்து  மடியும் பச்சிளங்கன்று,
இல்லையென வாதிடுவார் மூடர் நின்று...
மாநிலத்தேர்ச்சி பெறும் பெண்மை ஒன்று,
மருத்துவம் இல்லையென்பார் திருடர் நின்று...
உழவெங்கள் தொழில் என்பார்இன்று,
அவர் குறைகேட்கமாட்டார் செவிடாய் நின்று...
பசுக்களை தெய்வம் என்பார் இன்று,
காசுக்காக கொல்வார் தொழில் தர்மம் என்று...
ஏழ்மை எங்கும் இல்லையென்பார் இன்று, 
ஏழைகளை கொல்லும் விஷமாய் நின்று...
வளர்ச்சி வளர்ச்சி என்றுரைப்பார் இன்று,
தினம் புதிய புதிய வரியாய் நின்று...
கருப்பு பணம் ஒழிப்போம் என்பார் இன்று,
களவாணி கூட்டமோடு ஒன்றாய் நின்று...
நாளொருவண்ணம் பிறந்ததென்பார் நின்று,
அறுவை சிகிச்சையில் புதிய இந்தியா இன்று...
வலிபொறுக்காமல் துடிக்கிறாள் தாயவள்..
பாலின்றி சாகிறாள் சேயவள்...
போதுமடா இந்த புதிய சிகிச்சை...
போதுமடா மீண்டும் புதிய பிறப்பு...

பசுந்தெய்வம்...

பசுக்கள் 
தெய்வம்...
கொன்று 
தெய்வத்திடம் 
அனுப்பிவிடு...
ஏனெனில் 
இது 
மனிதக்காடு...