வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஒழுக்கம்!!!

வீட்டில் 
செய்யாததை,
வெளியில்
செய்யாதே...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

முருகன்...

பிறைநுதல் தனில்,
இமை விரிந்திட,
பொறி விழுந்தது,
விழி வழியில்...

சுடர் குளிர்ந்திட,
மனம் துதித்திட,
கரு பிறந்தது,
மலர் மடியில்...

கிராமிய காதல்!!!

செம்மறிய கட்டிபுட்டு,
செங்கடல தின்னுகிட்டு,
வாரான், அவன் வாரான்...
சண்டித்தனம் செஞ்சிபாக்க,
சப்பமூக்கி கம்பெடுத்து,
வாரா, அவ வாரா...

நத்தஒன்னு தூக்கம்கெட்டு,
நெனஞ்சிட ஓட்டவிட்டு,
வருதே, வருதே...
சீண்டிப்பாக்க ஆசைப்பட்ட,
நண்டுஒன்னு தொல்லைஇப்ப,
தருதே, தருதே....

அம்மாடியோ காதல் தானா???
ஊரறிஞ்ச சேதி தானா???
எங்கேபோய் முடியும்??? தெரியலையே...
காடும் மேடும் பதிலே சொல்லலியே...

புதன், 7 ஆகஸ்ட், 2013

அடிமைக்கூட்டம்...

செங்கற் சூளை போல,
பலநாளா வயிறு காயும்...
சேவக்கூவும் நேரம் எங்க,
கண்ணு மெல்ல சாயும்...
ஆண்ட வீட்டில் அடிமைப்பட்டு,
கேப்பக்களி தான் மிச்சம்...
அத கருப்பச்சாமி கேட்டுபுட்டா,
முதுகுல வயிறு முட்டும்...
சங்கு கழுத்துல கத்திப்பார்த்தேன்,
சாமிகாது கேக்கலடா....
பூமியில் பொறந்த போறப்ப எண்ணி,
சாவும் இப்ப வெலகுதுடா...

செம்மண் சாந்து பூசி,
பட்டகாயம் மெல்ல ஆறும்...
செந்நெல் சோறு பொங்க,
கேப்பச்சட்டியும் கெஞ்சும்...
கொட்டிலில் அடைச்ச காளை கூட,
கோவப்பட்டா சீறும்...
கூனிக்குறுகி வாழுங்கூட்டம்,
எப்பநெஞ்ச நிமிரும்...
வீழ்ந்தாகூட வீரந்தாண்டா,
தோளுல துண்ட ஏத்துங்கடா...
முதுகுல சுமந்த மூட்டைய எறக்கி,
தலையில எழுத்த மாத்துங்கடா....

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ஆதிவாசி!!!

இந்த காடே எங்கவீடு,
இதில் காட்டு எல்லைக்கோடு...
பிரிச்சி பாக்குற பழக்க வழக்கம்,
ஆதிவாசிக்கு இல்லையடா...
பட்டா போட்ட நெலத்துல வாழ,
பாவி மனசு பதறுதடா...
வவுத்து பசிய போக்க இங்க,
தேனும் திணையும் இருக்குதுடா...
தப்பு தண்டா செய்யச் சொல்லுற,
பசிதான் வத்தி கெடக்குதடா...

இது ஆதியில் பொறந்த கூட்டம்,
ஆதாம் ஏவாள் போட்ட தோட்டம்,
சாதியும் சமையமும் எங்களுக்கில்ல,
காடே எங்க சாமியடா...
பாட்டன், பூட்டன், சொல்லித்தந்தது,
மண்ணு, மானம், வீரமடா...
பேரப்புள்ளைங்க, பழகிப்பாத்தது,
வில்லும், வேலும், கம்புமடா...
உங்க தோட்டா கொண்டு மாரதொளப்பது,
எப்படி வீரம் ஆகுமடா...???

ஏட்டு  கல்வி எதுக்கு...???
இந்தக்காடே பள்ளியா  இருக்கு...
ஒவ்வொரு நாளும் பாக்குற விசயம்,
மனசுல பாடமா பதியுதடா...
நாட்டுல பொறந்த நரிங்க கூட்டம்,
காட்டபிரிப்பது சூழ்ச்சியடா....
காட்டுல மேட்டுல திரியுரகூட்டம்,
களைச்சி போனது இல்லையடா...
இந்த காட்ட விட்டு வாழநெனச்சா,
கனவிலும் உசுரு போகுமடா...
எங்க கனவிலும் உசுரு போகுமடா...

கடல்!!!

ஓடிக்
களைத்து 
நின்ற  
நதிகளின் 
வியர்வை 
துளிகள்!!!

சிவம் !!!

நீரின்றி பயிரெல்லாம் காய்கின்ற போது,
கங்கைதர சடையவிழ்த்து ஈசனாய் வா வா...
துன்பத்தில் துயரத்தில் அழைக்கின்ற போது,
ஏழைக்கண்ணீரை துடைத்துவிட ருத்ரனாய் வா வா...
சர்வத்தில் சகுனிகளின் ஆட்டத்தை வீழ்த்த,
மூவுலகம் காக்கின்ற முக்கண்ணா வா வா...
அசுரர்கள் அழிக்கின்ற இனமொன்றை காக்க,
புதுவில்லேந்தி போர்புரிய புலியாக வா வா...
இருபாலர் உலகுக்கு சமமென்று காட்ட,
ஒருபாதி உமையாகி அர்த்தனாய் வா வா...
சவமாகி இடுகாட்டில் எரிகின்ற போது,
என்சாம்பலள்ளி பூசிக்கொள்ள சங்கரா வா வா...
அகிலத்தின் மாயையில் அகப்பட்ட என்னை,
அரணாகி ஆட்கொள்ள சிவமாகி வா வா...
அழைக்கின்றேன் வா வா!!!