என் அங்கம் செதில்
செதிலாய் சிதைந்தாலும்
காகிதத்தில் மரண
வாக்குமூலம் எழுதுகிறேன்..
தாள் பிடித்து எழுதிய,
கரங்கள் எல்லாம்,
என் தலை பிடித்து,
சீவிக்கொண்டே இருந்தன.
ஒவ்வொரு சீவலுக்கும்,
ஒருபக்க கதை, கவிதை,
கட்டுரை, வரைவுயென
விரைந்து கொண்டே இருந்தேன்.
கிறுக்கல்களாய் நேராயின,
பிஞ்சு கரங்களுக்கு.
நடுக்கங்கள் உண்டாகின,
வயோதிக கைகளுக்கு.
இவ்வுலகில் தோன்றிய
அணைத்து படைப்புகளையும்,
முதலில் படித்தவன் நான்.
மற்றவர்க்கு தாளில் வடித்தவன் நான்.
ஒவ்வொரு முறையும்,
அங்கம் சீவச்சீவ வடிந்த
என் உதிரத்தில் வரலாற்றை,
எழுதிக்கொண்டே போகின்றேன்.
நானே மறுமுறை பிறந்து,
மாற்றி எழுதுகிறேன்.
நானே மீண்டும் பிறந்து,
புதியன படைக்கிறேன்.
சட்டங்களில் உள்ள
கையொப்பமும் நான்.
கவிதைகளில்
முற்றுப்புள்ளி நான்.
அனைவரின் தலைவிதியை,
உருவாக்குபவனும் நான்.
சிலரின் தலைவிதியை,
மாற்றி எழுதுபவனும் நான்.
பாமரனின் கையோ?
படைத்தவனின் கையோ?
அடிமையின் கையோ?
ஆள்பவனின் கையோ?
பேதமில்லை எனக்கு.
எழுதுவதே இலக்கு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக