புதன், 3 டிசம்பர், 2014

தோழி...

எனைப்போல் பிம்பம்,
என்முன் உலவிட...
அவள்தான் நானென,
அறிந்தேன் பழகிட...

நிழலே துணையென,
மனமும் என்னிட...
நிஜமாய் என்முன்,
தெரிந்தாய் உதவிட...

ஆழியில் விழுந்தது,
உந்தன் பிம்பம்...
ஆடியில் தெரிந்தது,
ஆதிரை உருவம்...

இனி ஆலையம் எதற்கு?
ஆண்டவன் எதற்கு?
தடைகளை களைந்திட,
தோழியர், அகல்விளக்கு!!!

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

தந்தை...

நீ சிரித்தாய் 
நான் சிரித்தேன்...
நீ முறைத்தாய்,
நானும் முறைத்தேன்...
உன்னையே நான்,
பிரதிபலிப்பேன்...
ஏனெனில் உன் 
பிம்பம் நான்...

புதன், 17 செப்டம்பர், 2014

புதுயுகம்!!!

எளியோர் தமை 
வசை பாடிடும் 
இகழ் நாவினை 
அறுப்போம்...

மனம் வாடிட,
முதியோர்களை 
விடுப்பார் தமை 
வெறுப்போம்...

பகைப்போர் எவர்?
எதிர்ப்போர் எவர்?
தலை மாண்டிட,
அடிப்போம்...

வறியோர் பிணி,
பசி ஆறிட,
வரும் நாளினில்,
உழைப்போம்....

பெரியோறவர் 
புகழ் பாடிடும் 
புது யுகம் 
வென்றெடுப்போம்...

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

தமிழ்மகன் அழுகை...

அம்மா, என் அம்மா...
என் ஆணவம், நீயம்மா...
என் நாவினில் உதிர்ந்திடும்
சொல்வளமின்று, சோர்ந்து போனதம்மா...
என் சொற்களை கேட்டிடும்,
காதுகள்ஏனோ, செவிடாய் போனதம்மா...
ஐவிரல் எழுதிய ஏடுகள்,
வெற்று கூடுகள் ஆனதம்மா...
ஏய்த்திடும் உதடுகள் வாசிப்பின்றி,
வஞ்சனை செய்யுதம்மா...
என் அழுகையை துடைத்திடும்,
ஆறுதல் மொழிகள் இங்கே இல்லையம்மா...
இனிவாழும் காலம் கேட்பாரின்றி,
தமிழ் மெல்லச் சாகுமம்மா....

திங்கள், 15 செப்டம்பர், 2014

யதார்த்தம்...

கற்பனை கதவினை,
தமிழ் தாழிட்டு,
கவிதையை பூட்டிவைப்பான்,
நற்கவிஞன்...
தாழினை உடைத்தெறிந்து,
கவிதையை சிறைமீட்பான்,
நல்வாசகன்...
நான், கவிஞனுமில்லை...
நீ, வாசகனுமில்லை...

புதன், 10 செப்டம்பர், 2014

வழிகள்...

கனவுகள் சுமந்திடு,
கனக்கையில் விழித்திடு,
இயன்றிடும் நாள்வரை,
இழந்திட மறுத்திடு...

இடர்களை கலைத்திடு,
இடுக்கனில் நகைத்திடு,
வளர்ந்திடும் நாள்வரை,
இகழ்களை பொறுத்திடு...

வலிகளை செதுக்கிடு,
வழிகளை பெருக்கிடு,
வாழ்ந்திடும் நாள்வரை,
முயற்ச்சிகள் தொடர்ந்திடு...

பகைமையை விடுத்திடு,
நல்வினை எடுத்திடு,
அகிலமே அரண்டிட,
வெற்றிக்கனை தொடுத்திடு...

சனி, 6 செப்டம்பர், 2014

தேவதை...

அடடா... 
புயல் பூர்த்ததே,
அவள் பார்த்திட,
இந்த மனதில்...

மெழுகாய்,
மனம் உருகுதே,
பின், உறையுதே,
இவள் சிரிப்பில்...

புதிதாய், 
இவன் தேடலும், 
மெல்ல தொடங்குதே,
இரு விழியில்...

அழகாய்,
ஒரு வானிலை,
தந்து போகிறாள்,
இவன் வழியில்....

யாரோ யாரோ????
இந்த தேவதை யாரோ???

தேடல்...

கவிஞனின்
தேடல்,
வெள்ளைத்தாளில்  
ஒளிந்திருக்கும்,
வரிகள்...

வியாழன், 26 ஜூன், 2014

ஐவிரல்...

ஐவிரல் ரேகை 
தெரிந்திட,
எழுதினேன்.
அமைதி,
ஆக்கம்,
ஆற்றல்,
முயற்சி,
நம்பிக்கை.
இவையெல்லாம் 
வெற்றிரேகை 
படர்ந்திருக்கும்,
ஐவிரல்கள்..

நிமிர்ந்து நில்...

வீழ்ந்தே இருப்பினும்,
நாளும் தொடரும்,
நிழல் தரும் 
நம்பிக்கை அழகு,
நிழலழகு...

சனி, 21 ஜூன், 2014

பெருமிதம்!!!

என் எழுதுகோலின் ஆடுகளம்,
இந்த வெள்ளை காகிதம்...
வெற்றியும் தோல்வியும்,
வாசிப்பவர் புரிதலிலே...

வியாழன், 22 மே, 2014

தெரியுமா?

என்கால் தடங்களை
சிறையெடுத்த அவள் 
வாசல்கோலக் கம்பிகள் 
சொல்லும், நான் 
காத்திருந்த நாட்களை...

சனி, 5 ஏப்ரல், 2014

கருவேல நிழலும், கண்ணீர் துளியும்...

இராமநாதபுர மாவட்டம், பேருந்து வசதி இல்லாத மலையோர கிராமம். மழை நீரை சிறிதும் கானா புழுதிக்காடு. அன்றாட வாழ்கையை நடத்த மலையில் கிடைக்கும் கொம்புத்தேனும், சேனைக்கிழங்கும் பெரிதும் உதவியது. ஊரில் மொத்தம் இருபது முதல் முப்பது வீடுகள். அதில் ஒன்று பணக்கார வீடென்று சொல்லும்படி எதுவும் இல்லை. ஊரில் உள்ள ஆட்கள் எல்லாம் அருகில் இருந்த செங்கல் சூளையில் வேலை செய்து பிழைப்பை ஒட்டிக்கொண்டிருந்தனர்.

சூரியன் சுட்டெரித்த வறண்ட செம்மண் பூமி. கூரையில் சன்னலுடன் ஓர் பனைஓலை வீடு, சுண்ணாம்பில் குளித்து பளிச்சென்று ஒளிர்ந்தது! பச்சைபசேலென்று தெரிந்தது கருவேலமரம் மட்டுமே!. மூவர்ணகொடியும் இதுபோல் ஒளிர்ந்ததில்லை. வீட்டின் முற்றத்தில் கொதித்து கொண்டிருந்தது வெறும் உலை மட்டுமல்ல, அதை பார்த்துகொண்டிருந்த கண்ணமாளின் வயிறும் தான், பசியில். பிள்ளைக்கு உணவளிக்கும் பதற்றத்தில், பாத்திரம் அவள் விரல்களை சுடுவதை உணராமல் சோறாக்கி கொண்டிருந்தால். கதிர்வேலனை பள்ளியின் மணியோசை கேட்கும் முன், அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

பக்குவமாய் பள்ளிக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தான் கதிர்வேலன், ஆரம்ப பாடசாலையில் பயிலும் 2ஆம் வகுப்பு மாணவன். அரசு பள்ளியில் தந்த சீருடை, வருடம் முடியும் முன், அதன் ஆயுட்காலம் முடிந்ததை உணர்த்தியது.சுவர் ஆணியில் தொங்கிய கண்ணாடியில் தலை வாரிகொண்டிருந்தான். சீராய் படிந்த தலைமுடி, நெற்றியில் திருநீர், திவ்யமாய் இருந்ததது அந்த பிஞ்சு முகம். வேலன் என்று பெயர் சூட்ட இதுவும் ஒரு காரணமோ? சுவற்றில் ஒட்டி வைத்திருந்த முருகன் படத்தை பார்த்து வணங்கி நின்றான். வீட்டு பாடத்தை முடிக்கவில்லை, ஆசிரியரிடமிருந்து காப்பாற்ற கேட்டுக் கொண்டிருந்தான். பள்ளியில் இருந்து வந்ததும், மறுநாள் அடுப்பெறிக்க, மலைகாட்டில் சுள்ளிகள் எடுக்க சென்றதால் வந்த வினை இது. வீடு திரும்ப நேரம் ஆனதால், முடிக்க முடியாமல் போயிற்று. சூரியனும் வேலனுக்கு உதவ முன்வரவில்லை. மாலை நேரம் வந்தவுடம் சட்டென்று மறைந்து விட்டான்.

பனைஓலை வீட்டில் மின்சாரம் ஏது? நிலவொளிதான் ஒரே வெளிச்சம். அதிலும் எழுத முற்பட்டவன், பாடத்தை முடிக்க முடியாமல் உறங்கிவிட்டான். அரைகுறையாய் முடித்த பாடத்தை கொண்டு சென்று ஆசிரியரிடம் காண்பித்தால், அம்மாவை அழத்து வர சொல்வார் என்று நினைத்து பயந்தான். கண்ணம்மா சோற்றுச்சட்டியை கொண்டு வந்து உள்ளே வைத்தாள். பிள்ளையை அழைத்தாள் உணவளிக்க. பயத்தில் அவனுக்கு அரை வயிறுதான் இறங்கியது. சுவற்றில் தொங்கிய பையை எடுத்து தோளில் சேர்த்தான். வேகமாய் பள்ளிக்கு புறப்பட முற்பட்டு வீட்டின் வாசல் வழியே வெளியே வந்து நடக்க தொடங்கினான்.

பிள்ளை பள்ளிக்கு சென்றதும், தானும் ஆக்கிய உணவை எடுத்து தூக்குச்சட்டியில் வைத்துக்கொண்டு புறப்பட்டாள் செங்கல் சூளைக்கு. சூளையில் வெந்துகொண்டிருந்த களிமண்ணை, மேலும் வலுப்படுத்த தீயை கொஞ்சம் அதிகம் ஏறியவிட்டார்கள் வேலையாட்கள். பரபரப்பாய் வேலை நடந்து கொண்டிருந்தது, நேரம் 12மணி ஆவதை சூரியன் சுளீர் என்று மேனியை சுட்டு உணர்த்தினான். மரக்கிளையில் தொங்கவிட்ட சோற்றுச்சட்டியை எடுத்து காலை உணவையும், மதிய உணவையும் ஒரே வேலை, சேர்த்து முடித்தாள். வறுமை கற்றுத்தந்த சிக்கனமும் மேலாண்மையும் இதுவோ என்று எண்ணத்தோன்றும்?

காய்ந்திருந்த செங்கற்களை, பிரித்து எடுத்து, எண்ணி வைத்துக்கொண்டிருந்தாள். அப்போது அக்கா அக்கா என்று ஒரு குரல் லேசாய் தழுதழுத்தது. நிமிர்ந்து யாரென்று பார்த்தாள். கதிர்வேலனின் நண்பர்கள் இருவர் பள்ளிசீருடையில் வந்திருந்தார்கள். என்னவென்று தெரிய, அந்த பிள்ளைகளிடம் கேட்டாள். பிள்ளைகள் ஆசிரியர் பள்ளிக்கு அழத்து வரச்சொன்னதை தெரிவித்தார்கள். தயக்கதுடம் தன் முதலாளியிடம் சொல்லிவிட்டு பள்ளிக்கு சென்றாள், ஆசிரியரை சந்திக்க. வழி நெடுகிலும் வேலனின் நண்பர்கள் எதுவும் பேசாமல் மௌனமாய் நடந்து வந்தார்கள், அவளோடு. இந்த மௌனம், அவளின் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. ஒருவழியாய் பள்ளிக்கு வந்து சேர்ந்தார்கள்.

மதியம் 3மணி. பிள்ளைகள் எவரும் விளையாடவில்லை. வழக்கத்திற்கு மாறாய் ஒரு நிசப்தம். பாலர்கள் இருவரும் ஆசிரியரின் அறைக்கு அவளை அழைத்து சென்று நிறுத்தினார்கள். ஆசிரியர் அவளை அழைத்து செய்தியை சொன்னதும் அலறி அடித்து அழத்தொடங்கினாள். காரணம், வேலன் செய்த வினைகள் இவையாவும். ஆம் அந்த கடவுளின் இறக்கம் துளியும் இல்லை வேலன் மீது. பள்ளியில், மனப்பாடம் செய்து வைத்திருந்த குறளை, உரக்க சொல்லும்பொழுது மயங்கி விழுந்தான். விழுந்தவனை, எழுப்ப முயற்சித்தும் பலன் இல்லை. இறுதியில், காலம் தாழ்த்தாமல் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், ஆசிரியரும், 8ஆம் வகுப்பு பிள்ளைகளும்.

மயங்கிக்கிடந்த வேலனை பரிசோதித்த மருத்துவர், எதுவும் புரியாமல் விழித்தார். பள்ளியில் நடந்தவற்றை மௌனமாய் கேட்டறிந்தார். மேல் பரிசோதனைக்கு வேலனை தனி அறைக்கு மாற்றினார். ரத்தஓட்டம் சீராக இல்லாததை அறிந்து கொண்டார். வேலனின் இதயத்துடிப்பை கேட்க, கேட்க அவரின் முகம் கொஞ்சம் மாறியது. பின் வேலனிடம் பேச்சு கொடுக்க துவங்கினார். எல்லா கேள்விகளுக்கும் வேலனிடமிருந்து கிடைத்தது, மௌனம் மட்டுமே. எவ்வளவோ முயற்சித்தும், வேலனை மயக்கத்திலிருந்து விழிக்க செய்ய முடியாமல் தோற்றார்.

கண்ணம்மாளும், ஆசிரியரும் மருத்துவமனைக்கு வந்தனர். வேலனிருக்கும், அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்று சென்றனர். வேலனுக்கு பிராணவாயு செலுத்த பட்டுக்கொண்டிருந்தது. உள்ளே மருத்துவர்கள் பரிசோதித்து கொண்டிருந்தார்கள். முழு உடல் பரிசோதனையில், வேலனின் இதயம் சற்று பலவீனமாக இருந்தது தெரியவந்தது. அதிகம் சிரித்தாலோ, அழுதாலோ? ரத்தஓட்டம் அதிகரித்து மயங்கி விடுவான் என்ற உண்மையை தெரிவித்தார். செய்வதறியாமல் கண்ணம்மாள் மருத்துவரை வணங்கி நின்று, வேலனை காப்பாற்றுமாறு வேண்டினாள்.

மருத்துவர் என்ன கடவுளா? அனைவரையும் காப்பாற்ற? என்ற எண்ணம் எல்லாம் துளியும் இல்லாது, கண்கண்ட கடவுள் இவர் தான் என்று, பெரிதும் நம்பினாள் கண்ணம்மா. வேலனின் இதயம் பலகீனமாக இருப்பதையும், ரத்த அழுத்தத்தை தாங்க கூடிய சக்தி இல்லை என்பதையும் விளக்கிக்கூறினார். மருத்துவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்,  கண்ணம்மாவின் மனதில் இடியாய் இறங்கின. வேலன் மயக்கம் தெளிந்து கண் விழத்தான். கனவோ என்று எண்ணி சிறிது கிள்ளிப்பார்தான், அவனின் கைவிரலை. நிஜம் தான் என்று தெரிந்தது. அருகில் நின்ற தன் அம்மாவிடம் என்ன ஆகிற்று என்று கேட்டான், அவளோ ஏதும் இல்லை என்று சொல்லி அவன் தலையை கோதினாள்.

மாலை நான்கு மணிக்கு, வேலனை வீட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி கிடைத்தது. வேலனை தோளில் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஆதவன் மறைவது, மற்றொரு விடியலுக்கு என்பதை உணர்த்துவதாய் இருந்தது. ஒற்றையடிப் பாதையில் வீட்டிற்க்கு சென்றடைந்தாள். இதுநாள் வரை வேலனை அழாமல் பார்த்துகொண்டவள், இந்த நொடி முதல் அவனை அதிகம் சிரிக்க விடாமலும் பார்த்துக்கொள்ள தொடங்கினாள். ஆதவன் உதித்தான், மறைந்தான். வீட்டின் முன் வைத்திருந்த தென்னம் பிள்ளை வளர, வளர, வேலனும் வளர்ந்தான், அன்னையின் அரவணைப்பில்.

இதயம் பலவீனமாக இருப்பினும், அவன் எண்ணம் பலமாக இருந்தது. நன்கு படித்து தன்னைப்போல் உள்ளோரை காக்க மருத்துவன் ஆனான். பட்டப்படிப்புடன் தன் குடிசைவீடிற்கு திரும்பிய மகனை கண்ட, கண்ணம்மாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள், இனி கருவேல நிழலில் மெல்ல உலரும் இனிமையாக...

முரட்டுக்காளை!!!

விஜயன், என் பெயர். என்னை பற்றி சொல்லும் முன், நான் பிறந்த தஞ்சை மாவட்டத்தை பற்றி சொல்வது அவசியம். வீரத்திற்கு பெயர் போன நகரம், தஞ்சாவூர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம். தஞ்சன் என்றால் அசுரன் என்று பொருள். விஷ்ணு பெருமான், தஞ்சனை அழித்த இடம் என்பதால், தஞ்சாவூர் என பெயர் பெற்றதாய் ஆன்மீகவாதிகள் நம்புவதுண்டு. கரிகாலன் தன் அரச பீடத்தை, பூம்புகார் கடலில் மூழ்கும் என நினைத்து, இங்கே தஞ்சம் புகுந்ததால் தஞ்சாவூர் என் பெயர் பெற்றதாய் அரசியல் வல்லுனர்கள் கூறுவர். முத்தரையர் மன்னன், ஸ்வரன் மாறனால் உருவாக்கப்பட்ட நகரம் இது.சோழனும், பாண்டியனும், விஜயநகர பேரரசுகளும் ஆண்ட பூமி இது. மதுரை, தஞ்சை நாயக்கர்கள் வாழ்ந்த சுவடுகள் இன்னும் மறையவில்லை.

வீரம் மண்ணில் இருப்பதால் தான் என்னவோ? இங்கு விளையும் நெல்லுக்கும் ராஜராஜன் என்று பெயர் உள்ளது. அப்படிப்பட்ட மண்ணில் பிறந்த எனக்கும் வீரம் இருப்பதில் ஆச்சர்யங்கள் ஏதும் இல்லை. அந்த வீரம் தந்த பரிசு தான் இந்த சிறைச்சாலை. இன்று மாலை என் விடுதலை. இந்த சிறையில் நான் கழிக்கும் கடைசி நிமிடங்கள் இவை. செய்பவை அனைத்தும் தவறென தெரியாது, செய்யும் முன். அதுபோல தான் எனக்கும். நான் செய்தவை எவையும் திட்டமிட்டு செய்தவை அல்ல, எதிர்பாராமல் நிகழ்ந்தவை. சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் எனக்கு எதிராக அமைந்துவிட்டன. விளையாட்டாய் மஞ்சுவிரட்டில் தொடங்கி, மரணம் வரை சென்று விட்டது என வாழ்க்கை. மஞ்சு விரட்டில் பங்கேற்பது பாரம்பரியமாய் தொடர்ந்து வரும் ஓர் வழக்கம். காளையை பந்தயத்தில் விடுவதும், காளை அடக்குவதும் இரண்டும்தான்.

என் ஊர் கடந்தான்குடி, பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள சிறிய கிராமம். என் வீட்டிலும் ஓர் காளை இருந்தது. காங்கேயம் காளை, புளிகுலம் வகையறாவை சேர்ந்தது. இந்த வகை காளைகள் தான் எதிரியை எதிர்த்து நின்று தாக்கும். காங்கேயம் காளைகளை புலியும், சிங்கமும் கூட, எதிர் நின்று தாக்க அஞ்சும். திரைப்படங்களில் வருவதைப்போல் காங்கேயம் காளைகளை எதிர் நின்று அடக்கியவர் எவரும் இல்லை. ஆண் கன்று பிறந்தவுடம், சீம்பாலை கறந்து மனிதர்கள் உண்டுவிடும் இக்காலத்தில், மஞ்சுவிரட்டுக்கு காளைகளை வளர்ப்பவர்கள் இதனை செய்யமாட்டார்கள். தினமும் பருத்தியும், புண்ணாக்கும் தருவதோடு, கரும்புகளும் உணவாய் தந்து வளர்ப்பதுண்டு. 6 மாத காலம் ஆனா பின்பு, கன்றை குளத்தில் விட்டு, நீச்சல் பழக விடுவது வழக்கம். இது காளைகள் நன்கு கட்டுகோப்பாக வளர உதவும். பொதுவாக 15 முதல் இருபது வருடங்கள் வரை வாழும் ஒரு காளை, மூன்று வயது ஆனவுடம், சிறிய மஞ்சுவிரட்டிற்கு விட்டுவிடுவார்கள். 3 முதல் 13 வயது வரை காளைகள் மஞ்சு விரட்டில் பங்கேற்கும்.

என வீட்டில் பிறந்த ஆண் கன்றுக்கு, நான் தான் பெயர் சூட்டினேன், ஐயனார். என் ஊர் ஐயனார் சாமியின் பெயரை வைத்தேன். காரணம், ஐயனாரை கண்டால் திருடனும் அஞ்சுவான் என்று பாட்டி சொல்ல கதைகள் கேட்டதுண்டு. அதுபோல் என் ஐயனாரை கண்டால் அனைவரும் அஞ்ச வேண்டும் என்று நினைத்தேன். ஐயனார் பிறந்தபோது எனக்கு 13 வயது. தினமும் காலை எழுந்தவுடன் மறக்காமல், அய்யனாரிடம் பேசிவிட்டுத்தான் மற்ற வேலைகள். ஐயனார் படு சுட்டி, என் வீட்டு தோட்டத்தை 5 நிமிடத்தில் 50 முறை சுற்றிவந்துவிடுவான். அவனை பிடிக்க முற்பட்டு ஒவ்வொரு முறையும் தோற்ப்பது தான் வாடிக்கை. முதல் 3 மாதம் வெறும் பால் மட்டும் தான் அவன் உணவு. பிறகு மெல்ல புண்ணாக்கும், தவிடும் சேர்ந்த நீரை பருக ஆரம்பித்தான்.

வருடா வருடம் எங்கள் ஊர் திருவிழாவில், மஞ்சு விரட்டு நடப்பது வழக்கம். வருடம் தவறாமல் அதை காண சென்றுவிடுவேன். அப்படிதான் ஐயனார் பிறந்த அந்த வருடம், நான் என் சக நண்பர்களோடு மஞ்சு விரட்டு காண சென்று இருந்தேன். பொதுவாக சிறு பிள்ளைகளை வேடிக்கை பார்க்க அனுமதிப்பதில்லை, அதனால் அருகில் இருந்த ஆலமரத்தில் ஏறி கிளையில் உட்கார்ந்துகொண்டு வேடிக்கை பார்த்தோம். அந்த வருடம் நடந்த போட்டியில் அணைத்து காளைகளும் தோற்று விட்டன. காலையின் கொம்பில் இருக்கும் துண்டை அவிழ்த்தால் வெற்றி. அணைத்து காளைகளின் கொம்பில் கட்டப்பட்டு இருந்த துண்டுகளையும் அவிழ்த்துவிட்டனர் என் ஊர் இளங்காளைகள். விழா முடிந்தவுடன் பரிசுகள் வழங்கப்பட்டன. பக்கத்துக்கு கிராமங்களிலிருந்தும் வந்து வெற்றி பெற்று சென்றனர். இதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பன், என்னிடம் நாளை உன் ஐயனாரும் இப்படிதான் தோற்ப்பான், என்றான். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்று இரவு முழுவதும், என் நண்பன் கூறிய வார்த்தைகள் என்னை உறங்க விடாமல் செய்துவிட்டது.

மறுநாள் விடிந்தவுடன், நேராக அய்யனாரிடம் சென்று வேண்டிக்கொண்டேன், என் ஐயனாரை எவரும் தோற்கடிக்க கூடாது என்று, மஞ்சு விரட்டில். கோவில் பூசாரி என்னிடம் "என்னடா விஜயா? காலைளியே பலமா வேண்டிகிட்டு இருக்க?" என்று கேட்டார். நானோ ஏதும் சொல்லாமல் ஓடி சென்று ஐயனாரின் நெற்றியில், பூசாரி தந்த விபூதியை பூசினேன். பிறகு எனக்கு நானே சொல்லிகொண்டேன், "இனி என் ஐயனாரை எவனாலும் ஜெயிக்கமுடியாது" என்று. இதை கேட்ட ஐயனாரும் தலை ஆட்ட எனக்குள் புதிதாய் ஓர் நம்பிக்கை பிறந்தது.

நாள் தவறாமல் ஐயனாரை கவனித்துக்கொள்ள ஆரம்பித்தேன். வார விடுமுறை நாட்களில் குளத்தில் சென்று அய்யனாருக்கு நீச்சல் பழக கற்றுக்கொடுத்தேன். இப்படி நாட்கள் சென்று கொண்டே இருந்தது. ஊரில் அனைவரும் என்னை "இவன் மாடு தான் மேய்க்க போறான்னு" கேலியாய் பேசினார்கள். ஐயனார் 3 வயது ஆனவுடன் அதற்க்கு மூக்கனாங்கயிறு போட்டார்கள். அவன் திமிரியதை கண்டு சற்று பயந்து விட்டேன். சக நண்பர்கள் 10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார்கள், நானோ என் ஐயனாரை எப்படியாவது அடுத்த வருட ஜல்லிக்கட்டில் விட வேண்டுமென்று எண்ணிகொண்டிருந்தேன். அதற்காக அவனை தயார் செய்து, அய்யனாருக்கு லாடம் அடித்து, அவன் கொம்புகளை சீவி விட்டு, பயிற்சிகள் தொடங்கினேன்.

முதலில் ஐயனாரை கட்டி வைத்து, அவன் எதிர் நின்று, சீண்டினேன், பதிலுக்கு அவனும் சீண்டினான். நான் தலை அசைக்க, அவனும் தலை அசைத்தான். நான் முன்னும் பின்னும் செல்ல அவனும், முன்னும் பின்னும் சென்று சீறத்தொடங்கி புது உற்சாகம் அளித்தான். இதேபோல் பயிற்சிகள் தொடங்கின. பிறகு அவன் திமிலை பிடித்து அவனை அடக்க முயற்சித்தேன். சட்டேன்று அவனோ என்னை தூக்கி எறிந்துவிட்டான். எனக்கோ சிறிது காயம் கையில். அனால் என் ஐயனார் முழவதும் தயாரானதை கண்டு என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. நாட்கள் நகர நகர, என் ஐயனார், கம்பீரமாய் நிற்க தொடங்கினான். திமிலை அசைத்து, தலையை ஆட்டினால், எனக்கே சில சமயம் அவன் அருகில் செல்ல பயமாய் இருக்கும்.

ஊர் திருவிழாவும் வந்தது. அவன் முதன் முதலில் போட்டியில் பங்கேற்றான். காளையின் உரிமையாளர்கள், போட்டி தொடங்குமுன், பரிசுத்தொகையை அறிவித்து தான், காளையை அவிழ்த்துவிடுவார்கள். நான் ஐயனாரும் மேல் இருந்த நம்பிக்கையில், நான் அணிந்திருந்த என் மோதிரத்தையும், சங்கிலியையும் பரிசுப்பொருளாய் அறிவித்தேன். ஐயனார் சீறி பாய்ந்து புறப்பட்டான், சில காளைகள் அவனை அடக்கி பரிசை தட்டி செல்ல முற்பட்டார்கள். ஐயனாரின் திமிலை சிலர் பிடித்து அடக்க முயற்சித்தவர்களை தூக்கி எறிந்தான். எதிரே வந்தவர்களை, மின்னல், மேகத்தை கிழிப்பது போல், கிழித்தான். 50க்கும் மேற்பட்டோர் முயன்றும், பிடிக்க முடியாமல் தோற்றனர். எவரும் அடக்க முன்வராமல் பந்தயக்கூடத்தில், தனியாய் வெற்றியுடன் நின்றான். மகிழ்ச்சியில்  நானும் கம்பீரமாய் நின்றேன்.

போட்டியை பார்த்த கார்மேகம் என்ற ஒருவர், என்னிடம் அன்று மாலை ஐயனாரை விற்று விடுமாறு கூறினார். நான் முடியாது என்றேன். காளையை கேட்டவர், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துபர், இப்படி ஒரு காளையை பார்த்ததில்லை என்றும் சொன்னார். நானோ முடியாது என்று மறுத்து கூறிவிட்டேன். வரிசையாய் அடுத்தடுத்து நடந்த 3 வருடமும், ஐயனார் போட்டியில் வெற்றி பெற்றான். மூன்று வருடமும் ஐயனாரை வாங்க நினைத்த கார்மேகம், தோல்வியைத் தழுவினார். அய்யனாருக்கு 7 வயது ஆனது. அவனை, அடுத்த வருடம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் முதன் முதலாக பங்கேற்க வைக்க வேண்டும் என்று நினைத்து அதற்க்கான வேளையில் இறங்கினேன். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க, முன் அனுமதி பெறுவது அவசியம், 3 மாதத்திற்கு முன்னதாக, போட்டி அமைப்பாளரிடம் விண்ணப்பம் பெற்று, தொகையை செலுத்தி அனுமதி பெறவேண்டும். அனைத்தையும் செய்துவிட்டேன். தை மாதம் 3ஆம் நாள் போட்டி என்று தீபாவளி நாளில் அறிவித்தார்கள். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், அய்யனாருக்கு பருத்தியும், புண்ணாக்கும் அப்படியே வாங்கிக்கொண்டு, வீடிற்கு புறப்பட்டேன்.

வீட்டிற்கு வந்ததும் கொட்டகையை பார்த்த எனக்கு, அதிர்ச்சி. வழக்கத்திற்கு மாறாய் ஐயனாரின், வாயில் லேசாய் நுரை தள்ளி, கீழே விழுந்து கிடந்தான். கூரையில் சொருகி இருந்த குழலில் அரளி விதையின் வாசம். அதிர்ந்து போனேன். மூக்கணாங்கயிறு கட்டி இருந்தாதால், இந்த நாச வேளையில் சிலர் செய்து இருக்கிறார்கள். இல்லையெனில், என்னைத்தவிர எவரையும் நெருங்க விடமாட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் உடனே, தண்ணீரை எடுத்து ஐயனாரின் வாயில் அழுதுகொண்டே ஊற்றினேன். முடிந்த அளவு தண்ணீரை ஊற்றி விட்டு, மிதி வண்டியில் ஏறி, அருகில் இருந்த விலங்கியல் மருத்துவரை அழத்து வர சென்றேன்.

செல்லும் வழி எல்லாம், ஐயனாரை பற்றி தான் நினைத்து கொண்டிருந்தேன். ஒருவழியாய் மருத்துவரை அழைத்து வந்து ஐயானாருக்கு வைத்தியம் பார்த்து அவனை பிழைக்க வைக்க 10 மணி நேரம் போராடினேன். இனி உயிருக்கு ஆபத்து இல்லை என்று, மருத்துவர் கூறுவார் , என எண்ணினேன். ஆனால் மருத்துவர் கைவிட, மனம் நொறுங்கி அழத்தொடங்கினேன். அந்த கயவனை கண்டு பிடித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தீயை எரிந்தது, மனதில்.

மறுநாள் ஊர் பஞ்சாயத்து கூடியது, குற்றவாளியை சரணடையுமாறு கூறினார் தலைவர். ஆனால் ஒன்றும் பலன் இல்லை. எவனும் குற்றத்தை ஒப்புக்கொள்ள முன்வரவில்லை. நான் கோபத்தில் அனைவரின் முன்னிலையில், "அவன கண்டு புடிச்சி கொல்லாம விடமாட்டேன் டா, இது என் ஐயனார் மேல சத்தியம்" என்று உரக்க கூறிவிட்டு சென்று விட்டேன். மறுநாள் காலை, காவல்துறையினர் என்னை கைது செய்தார்கள். காரணம் ஊர் ஆற்றங்கரையில், கார்மேகத்தின் வேலையாள் பிணம் இருந்தது. ஊர் மக்களெலாம் என்னை குற்றவாளி என்று தூற்ற, சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் எனக்கு எதிராய் அமைந்தன. 5 வருடம் கடுங்காவல் தண்டனை என்று தீர்ப்பானது. இந்த 5 வருடத்தில், என் வீடு என்ன ஆனதென்று தெரியவில்லை, எந்த செய்தியும் வந்து சேரவில்லை.

இனி... இன்று மாலை, 4 மணி, சிறை மரபுகளை முடித்து, வெளியே வந்தான். சிறையில் 5 வருடம் உழைத்த உழைப்பு வெறும் 3 ஆயிரம் ரூபாய். கையில் எடுத்துக்கொண்டு, ஊருக்கு செல்ல பேருந்து நிலையம் சென்றான். பேருந்து செல்ல, செல்ல, சாலை ஓர காட்சிகள் மாறி இருந்தது. வருடங்கள் பலவாகியும் ஐயனாரின் நினைப்பு மட்டும் அவன் மனதை விட்டு அகலவில்லை. பேருந்து கடந்தான்குடி வந்தவுடன், கீழே இறங்கினான். பேருந்து நிலையத்தில் கார்மேகம் நின்று கொண்டிருந்தார். விஜயனிடம், தான் தன் வேலையாள் இடும்பனிடம், அய்யனாருக்கு விஷம் வைக்க சொல்லவில்லை, என்று சொன்னார். விஜயனோ, தனக்கு தெரியும் என்று சொல்லி, நடந்ததை சொன்னான். "இடும்பன், மஞ்சு விரட்டில் அய்யனாரிடம் காயமடைந்தவன். முதல் முறை ஐயனார் போட்டியில் பங்கேற்றபோது, இடும்பனின் வையிற்றை கிழித்தான் ஐயனார். இரண்டு வருடமாய் படுக்கையில் இருந்து மீண்டு வந்தவுடன், ஐயனாரை பழிதீர்க்க நினைத்து இவ்வாறு செய்தான்" என்று விஜயன் கூறினான்.

நாட்கள் சென்றது. விஜயனும், கார்மேகத்திடம், வேலைக்கு சேர்ந்தான். கார்மேகத்தின் மாட்டுப்பன்னையில், புதிதாய் ஓர் பசு ஆண் கன்று ஈன்றது. விஜயன் பெரிதும் மகிச்சி அடைந்தான். அந்நிகழ்ச்சி விஜயனுக்கு ஐயனாரை மீண்டும் நினைவு படுத்தியது. மகிழ்ச்சியில், தான் வைத்திருந்த 3 ஆயிரம் ருபாய் கொடுத்து, அந்த கன்றை வாங்கிக்கொண்டான். இப்போது இந்த முரட்டுக்காளைக்கு, மீண்டும் ஓர் ஐயனார் கிடைத்து விட்டான்...

வைகறை தூறல்கள்!!!

         அந்தி சாயும் நேரம். இரை தேடிச்சென்ற ஊர் குருவிகள், தன் கூட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தன. குருவி கூட்டிற்கு அலங்கார விளக்குகள் மாட்டப்பட்டு இருந்தன. மின்சாரமில்லா பல குடிசைகளுக்கு மத்தியில், ஓரறிவுள்ள உயிர்களுக்கு எல்லாம் உல்லாசம் தர இந்த ஏற்பாடு! தெருவோரம் இருந்த மின்கம்பங்கள் எல்லாம் இரவிலும் பளிச்சென்று மின்னின, புத்தம் புது சாயலில். நட்சத்திர கூட்டம் சற்று கீழே இறங்கி வந்தது போல ஒரு காட்சி. ஒளி இழந்த கிழவரின் கண்களுக்கும், புத்துயிர் அளித்தது புது வெளிச்சம். இந்த தடபுடல் ஏற்பாடுகள் எல்லாம் விடியலில் தொடங்க இருக்கும் திருவிழாவிற்க்காகத்தான். ஒரு மாதமாய் அங்கும் இங்கும் அலைந்து, உண்டியல் குலுக்கியது நடந்து கொண்டிருந்த ஏற்பாட்டில் தெரிந்தது.

        மாகறல் கிராமம். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்காவில் உள்ள ஓர் அழகிய கிராமம். புராண காலத்தில் வற்றாது ஓடிய செய்யாற்று படுக்கையில் அமைந்துள்ளது. உமையாள் தன் மகன் முருகன் விளையாட, கையில் இருந்த திரிசூலத்தால் பூமியின் மீது கோடிழுக்க உருவானதுதான் இந்த செய்யாறு நதி. தமிழ்நாட்டின் ஜவ்வாது மலை தொடரில் உதயமாகி ஓடும் இந்த நதி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட விவசாயிகளின் மிக முக்கிய நீர் ஆதாரமாக இன்றளவும் விளங்குகிறது! கர்நாடகம், நந்தி மலைக்குன்றில் உதயமாகி ஓடும் பாலாற்றின் உபனதியே இந்த செய்யாறு. நிலமற்ற ஏழை விவசாயிகள், பாலாறையும், செய்யாறையும்  உரிமை கொண்டாடுவது வழக்கம். நன்னீராய் ஓடிய நதி இன்று, விவசாயிகளின் கண்ணீராய், ஓடிக்கொண்டிருக்கிறது. செய்யாறுக்கு செய்வினை வைத்தவன் யாரோ? சென்னையில் உள்ள பல அடுக்கு மாடி கட்டிடங்களாய் மாறிப்போனது இந்த பாலாறும், செய்யாறும். பகல் கொள்ளையாய் நடக்கும் மணல் கொள்ளையில் இன்று காணாமல் போய்விட்டது. பணமுதலைகள், சுவற்றில் போட்ட மணல், ஏழை விவசாயிகளின், சோற்றிலும் விழுந்ததே, காலத்தின் கட்டாயம்! சிந்திக்க நினைக்காத, சிந்தையுள்ள மனிதனே, சமுதாய சிதைவிற்கு காரணம்!          

        இளவெண்பா, காலையில் பூர்த்த அல்லி. அதிகாலை சூரியனின் செந்நிற கரங்கள் அவள் மேனியில் பட பொன்னிறமாய் மின்னியது. ஓய்வின்றி சுழலும் கதிரவன், இளவேண்பாவை கண்டு சில நிமிடம், உறைந்து மயங்கிப் போய்விட்டான். சூரிய கிரகணம் என்று தவறாக கணித்து விட்டார்கள் மேலை நாட்டு விஞ்ஞானிகள்... இதை வெண்பாவின் மாயமென யாரறிவார்...? அளவான அறிவு, அறிவுக்கேற்ற அழகு, அழகுக்கேற்ற திமிர். இவை மூன்றும் இருந்தால் எவரேனும் வெண்பா தான். இப்படிப்பட்ட பெண்ணை தான் தேடிகொண்டிருந்தான் மாணிக்கம். ஊர் திருவிழாவை தலைமை ஏற்று நடத்தும் பட்டதாரி. மாணிக்கம் செய்யும் வேளைகளில் இதுவும் ஒன்று. படித்தது பொறியியல், செய்வதோ கிடைத்த வேலைகளை. எங்கோ, எவனோ ஒருவன், பொறியியல் படித்து கோடிகள் சம்பாதித்ததை எண்ணி, பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பொறியியல் சேர்த்தனர். அதில் மாணிக்கமும் ஒருவன். வியாபார நோக்கோடு பல தொழில்நுட்ப கல்லூரிகளை திறந்து விட்ட, பண முதலைகளின் வாயில் சிக்கிய எலும்பு துண்டு, ஏழை மாணவர்கள். வீடு காணி என அனைத்தும், விற்று படிக்கவைத்ததன் நோக்கம், தன பிள்ளை சொகுசாய் வாழ வேண்டுமென்ற எண்ணத்தில். அனால் நிலையோ, பலபேர் வாழ்க்கை படு பள்ளத்தில். சில வருடங்களுக்கு முன்னாள் அனைவரும் அறிவியல் பயின்றனர், இன்று பொறியியல், நாளை எதுவென்று யாருக்கு தெரியும்.

        மாணிக்கம் மிகவும் படபடப்பாய் இருந்தான், நேரம் இரவு 12மணி. கோவில் வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தது. காலை 5மணிக்கு பூஜைகள் தொடங்கி 7மணிக்குள் கொடியேற்ற வேண்டும். ஊர்மக்கள் திரளாய் வருவர். அதே நாள் வெண்பாவை பெண் பார்க்க வரும் நாள். கையோடு நிச்சயம் செய்ய போகிறார்கள் என்ற செய்தி அவனுக்கு தெரிந்திருந்தது. வெண்பாவிற்கு தெரியாமல் இவை அனைத்தும் நடந்தேறி கொண்டிருந்தன. தடுத்து நிறுத்த முயன்றால் தலை போகும் என்று அவனுக்கு தெரியும். காரணம், ஊர் நாட்டமை மருதுவின் மகள். அவள். அண்ணன் முத்து கம்பீரமாக கந்துவட்டி தொழில் செய்து வருகிறான். மாணிக்கம் திருவிழாவை பொறுப்பேற்று நடத்துவதே, வெண்பாவின் தந்தையிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில். நினைப்பது எல்லாம் நடந்து விட்டால், வாழ்கையின் ஸ்வாரஸ்யம் போய்விடும். இனி நடப்பவை நடக்கட்டும் என எண்ணி   தன மனதை மாற்ற முயற்சித்தான் மாணிக்கம்.

       3மணி நேரமாய் என்ன செய்வதென்று தெரியாமல், மௌனமாய் நின்று கொண்டிருந்தான். ஆம், அதிகாலை 3மணி இப்போது. சேவல் கூவியதோ? இல்லையோ? இவன் மனதில் சத்தம் மட்டும் கேட்கிறது. தோரணங்கள் முதல் ஒலிப்பெருக்கி வரை, அனைத்தும் தயார் நிலையில் இருந்தன, தத்தம் சேவைகளை புரிய. நேராய் வெண்பாவின் வீட்டிற்கு சென்றான்,  கோவில் நடைவரை சாவியை வாங்க. வெண்பாவின் வீட்டு வாசல் கோலத்தில் வரவேற்பு செய்தி, மணமகனே வருகவென்று. பார்த்து படித்ததும், ஒரு நிமிடம் நகைத்து விட்டு கதவை தட்டினான். திறப்பது வெண்பாவாய் இருக்க வேண்டும் என்று நினைத்தான். கண்களை இறுக மூடிகொண்டான். கதவின் தாழ்பாள் திறந்த சத்தத்தில் சில வினாடிகள் அவன் மெய் சிலிர்த்தது. கண்களை திறந்தான், கண்முன் நிற்பது வெண்பா. சொல்ல நாவேடுத்தான். சொல்லிய வார்த்தை அவள் காதில் விழும் முன், அண்ணனின் குரல் கேட்டது "யார்ரா அவன்". ஒரு நிமிடம் சுதாரித்து கொண்டு, "மாணிக்கம்" என்றான். வெளியே வந்த முத்து, என்னவேண்டும் என்று கேட்க, மாணிக்கத்தின் பதில் வரும் முன்னே உள்ளே சென்றாள், வெண்பா.

       வெண்பாவும் காலை கதவை திறந்தது, எதிர்பாராமல் நடந்தது அல்ல. மாணிக்கம் தன்னை தேடி வருவான் என்ற எண்ணத்தில் காத்திருந்தாள். இதுவரை இருவரும் பேசியது தனிமையில் மட்டும்.  மாணிக்கம், முத்துவிடம் "நடை சாவி வேணும்னே" என்று கேட்க, முத்து உள்ளே சென்று எடுத்து வந்தான். சாவியை வாங்கியவன், எதுவும் பேசாமல் கோவிலை நோக்கி மெல்ல நடந்தான், தன் முதல் முயற்சி தோல்வி அடைந்ததை எண்ணி. நேரம் காலை 3.30. மெல்ல ஊரில் உள்ள அனைவரும் எழதொடங்கினார்கள். ஊருக்கு வரும் முதல் பேருந்தில், வழக்கத்திற்கு மாறாய், 10பேர் வந்து இறங்கினர். வந்தவர்கள் யாருமில்லை, பஞ்சம் பிழைக்க வந்த நாடோடி கூட்டம். அனைவரும் கடைவீதியை நோக்கி நடந்தனர். ஒருவர் மட்டும் போகாமல் அங்கேயே நின்றார். நின்றவர், மாணிக்கத்தை பார்த்து "தம்பி தலைவர் வீடு எதுப்பா?" எனக் கேட்டார். மாணிக்கம் "சரி வாங்க காட்டுறேன்" சொல்லி அழைத்து சென்றான், வெண்பாவின் வீடிற்கு.

       வந்தவர் யார் என்று தெரியவில்லை. தயக்கத்தில் தெரு முனையில் இருக்கும் வீட்டை நோக்கி நடந்தான். மறுபடியும் கோலத்தில் எழுதிய வாசகத்தை படித்தான், அனால் முகத்தில் முன்பிருந்த நகைப்பு, காணாமல் போய் இருந்தது. மெல்ல கதவை தட்டினான், திறந்தது வெண்பாவின் தந்தை. அவரிடம், "ஐயா, உங்கள தேடி ஒரு பெரியவர் வந்திருக்கார்" என்றான். யாரென்று எட்டிப் பார்த்தார் மருது. "அடடே!!! வாங்க, வாங்க, என்ன இந்த பக்கம். எதாவது விசேசமா?" என கேட்டார் மருது. வந்தவர் மருதுவின் பால்ய நண்பர் என தெரிந்ததும் பெரு மூச்சு விட்டான், மாணிக்கம். பெரியவர் தன்னை முந்திக்கொண்டு உள்ளே செல்ல, வழிவிட்டு ஒதுங்கினான் மாணிக்கம். "அம்மா, தண்ணி கொண்டு வா" என உரத்த குரலில் சத்தம் கேட்க, தண்ணீருடன் வந்தாள், இளவேன்பா. இதுவரை காணமல் பொய் இருந்த நகைப்பு மீண்டும் அவன் முகத்தில் குடியேற, வெண்பாவை கண்டான். வெண்பா தண்ணீரை, மாணிக்கத்திடம் கொடுக்க முயல, "மொதல்ல பெரியவருக்கு கொடுமா" என குறுக்கிட்டார் மருது. வெண்பாவை மீண்டும் சந்திக்க வைத்த, நன்றிக்காக தண்ணீர் செம்பை, வாங்காமல் விட்டுவிட்டான் மாணிக்கம். பெரியவர் தண்ணீர் பருக, மருது, மாணிக்கத்தை "நாற்காலி எடுத்து வர சொன்னார்". உள்ளே சென்ற, மருது திரும்பும் முன், வெண்பாவும் செம்புடன் உள்ளே சென்றாள்.

        "மாணிக்கம், இங்க பாரு" குரல் கேட்டது. வெண்பாவின் குரலில், அவன் பெயரும் இன்று புதிதாய் கேட்டது அவனுக்கு. இதுதான் சமயம், சொல்லிவிட என்று எண்ணி, முற்பட்டாள் வெண்பா.
        வெண்பா : "மாணிக்கம் அத எடுக்கலாம்"
        மாணிக்கம்: "என் என்ன ஆச்சு?"
        வெண்பா : "நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
        மாணிக்கம்: "என்ன ? சொல்லு"
        வெண்பா : "எப்பிடி கேக்குறதுன்னு தெரில..."  
        மாணிக்கம்: "கோவில்ல பிரசாதம் வேணுமா? பூஜை முடிஞ்சதும் கொண்டு வந்துடறேன்"
        வெண்பா : "அது இல்ல... வேற..."

"வெண்பா......, வெண்பா......" குரல் கேட்டது, வெண்பாவின் பாட்டியிடம் இருந்து. கோபத்தில், "நீ வேஸ்ட் டா" என்று சிணுங்கி கொண்டே நடந்தாள் வெண்பா. வெண்பாவின் சினுங்களை ரசித்தபடியே, நாற்காலியை தூக்கி கொண்டு, தாழ்வாரம் சென்றான் மாணிக்கம். நாற்காலியை நடையில் போட்டான். மருதுவிடம், "ஐயா நான் கோவிலுக்கு போறேன்" என்று சொல்லி கிளம்பினான். அவன் கால்கள், கோலத்தை கடக்கும் முன்பு "மாணிக்கம்.... மாணிக்கம்...." அதே குரல் கேட்டது, வேன்பாவிடமிருந்து. சந்தோசத்தில் திரும்பினான். வெண்பா ஓடி வந்து, மூச்சிரைக்க சொன்னாள், "அம்மா கூப்பிட்டாங்க" என்று. வெண்பாவை கடந்து நடக்க முற்பட்டான். வீட்டின் பின்புறம் இருந்த துளசி மாடம் அருகே சென்றான். அப்போது, மீண்டும் கேட்டது...

       வெண்பா: "நில்லு...", தயக்கத்தில் நின்றான்..... திரும்பி வெண்பாவை பார்த்து,
       மாணிக்கம் : "என்ன....? சொல்லு...?"
       வெண்பா: "சொல்றேன்... என்ன தைரியம் உனக்கு, என்ன "நீ வா போனு" சொல்ற ....?"
       மாணிக்கம்: "அதனால....? என்ன இப்போ...?"
       வெண்பா: "எனுக்கு ஒன்னு தெரியனும்...?"
       மாணிக்கம்: "என்ன தெரியனும்...?"
       வெண்பா: "ம்... கோவில்ல பூஜை எத்தன மணிக்கு...?" கோபமாய் கேட்டாள்.
       மாணிக்கம்: "நீ எப்ப சொல்றியோ, அப்ப நடத்தலாம்..."
       வெண்பா: "நீ உருப்படவே மாட்ட போடா..." கோவத்தில் அவள் கண்கள் சிவந்தன...   "5மணிக்கு கோவில்கு வருவாங்க , கோவில்ல இரு, எங்கயும் போய்டாத, அம்மா சொல்ல சொன்னாங்க...
       மாணிக்கம்: "நீ வருவியா....?"
       வெண்பா: "நீ அங்க இருப்ப நா,  நிச்சயம் வர மாட்டேன்..."
       மாணிக்கம்: "நான் அங்க தான் இருப்பேன், so நீ வராதா..."

வெண்பா கோவத்தில் உள்ளே சென்று பின்கதவை தாழிட்டாள்... மாணிக்கம் கிளம்பினான், இம்முறை வீட்டின் கோலத்தை கடக்கையில், பெரிய சிரிப்புடன்... காலை மெல்ல விடிய தொடங்கியது. கோவில் நடையை திறப்பதற்குள் மணி 4.30 ஆகி விட்டது. கோவில் பூசாரி, கால் கடுக்க, மாணிக்கத்தின் வருகைகாக நின்றிருந்தார். பூசாரியின் அர்ச்சனை, சிவனுடன் சேர்த்து மாணிக்கமும் பெற்றான், உள்ளிருந்தபடியே... நொடிக்கு ஒரு முறை, கோவில் வாசலை பார்த்து கொண்டிருந்தான், வெண்பாவின் வருகைக்காக... மெல்ல ஊர் மக்கள் வர தொடங்கினர், ஒருவர் பின் ஒருவராய். மருதுவும், அவர் மனைவியும், கோவிலுக்கு வந்தனர். மாணிக்கம், மருதவை வரவேற்று, கோவில் மரியாதையை செலுத்தினான். பூசாரியும், சிவனுக்கு வைத்த வணக்கத்தை, மருதுவிற்கு வைத்தார். ஊர் மக்கள் வழி விட்டு நின்றனர், மருதுவும் அவர் மனைவியும், பிரகாரதிற்கு செல்ல... வெண்பா வரவில்லை... வெண்பா, கோவில் குளத்தில் கால் நனைக்க சென்றால் அவள் பாட்டியுடன்...

        மாணிக்கம், கோவில் வாசலில் இருக்கும், மருதுவின் வண்டிக்காரனிடம் சென்று கேட்டான்,

        மாணிக்கம்: "ஐயா வீட்ல, எல்லாரும் வந்தாச்சா...?".
        வண்டிக்காரன்: "வந்துட்டாங்க தம்பி..."
        மாணிக்கம்: "பாட்டிய காணோம்...?"
        வண்டிக்காரன்: "சின்னம்மா கூட குலத்துக்கு போய் இருக்காங்க, கால் நனைக்க"
        மாணிக்கம்: "சரி..."

மாணிக்கம் வருவதை பார்த்த, வெண்பா, தன் பாட்டியை, குளக்கரையில், விட்டுவிட்டு வேகமாய் உள்ளே நடந்தாள்.

        பாட்டி: "வெண்பா... வெண்பா... நில்லு மா.."
        வெண்பா: "ஐயோ கால் சுடுது பாட்டி, நீ பொறுமையா வா..."
        பாட்டி: "காலைல 5மணிக்கு கால் சுடுதா...? என்ன டா இவ...?"
        வெண்பா: "ஐயோ!!!!......:-) :-) நீ வா பாட்டி நான் போறேன்"

மாணிக்கம், பாட்டியை பார்த்தான், தனியாக வந்து கொண்டிருந்தார்... ஒரு வேலை கோவில் பிரகாரம் உள்ளே இருபாள் என்று, உள்ள செல்ல தொடங்கினான், மாணிக்கம்... உள்ளே இருந்த வெண்பா, மாணிக்கம் வருவதை கண்டு, கோவில் தூண் அருகே மறைந்து நின்றாள்... கோவில் முழுக்க சுற்றி தேடினான். எங்கும் வெண்பா கண்ணில் புலப்படவில்லை. கோவில் முழுக்க 10 முறை சுற்றி பார்த்தும், கண்ணில் பட்டது, பல்லவர் காலத்து சிற்பக்கலைகளே!!! அனைத்தையும் கோவில் சிலை ஓரம் நின்று பார்த்து கொண்டிருந்தாள், வெண்பா... கோவில் சிலை ஓரம், சிலை என நின்ற, வெண்பாவை சிற்பமென நினைத்து விட்டது, அற்பமான அவன் கண்கள்.... கண்முன் தெரிந்த சிலையிடம் சென்று, கோவில் கட்டிய பல்லவ மன்னனை, கடுமையாக திட்டினான், கோவிலை பெரிதாக கட்டியதற்கு.

          மாணிக்கம்: "கோவில கட்ட சொன்னா, என்னடா  கட்டி இருக்கான்...? எங்க தேடியும் அவல மட்டும் பாக்க முடியலையே..." சிலை மெல்ல அவனிடம் நகர்ந்து வர, கண்டுகொண்டான், சிலை அல்ல, அது வெண்பாவென்று....

          வெண்பா: "என்ன, சிலைய பார்த்து, எதோ சொல்லிட்டு இருக்க...?"
          மாணிக்கம்: "அதெல்லாம் ஒன்னும் இல்லையே...? ஹி ஹி ஹி"
          வெண்பா: "பாத்து, நீ பேசுறது கேட்டு, சிலைக்கு காது செவிடாகிட போது..."
          மாணிக்கம்: "நான் பேசுறது சிலைக்கு கேட்டுச்சோ இல்லையோ?, உனக்கு கேட்டுது இல்ல...?"
          வெண்பா: "oh நீ பேசுனியா!!!, எதோ ஒலருணா மாதிரி இருந்துது..."
          மாணிக்கம்: "சேரி ஒளர்ரத, முழுசா கேட்டுட்டு போ..."
          வெண்பா: " அத, அந்த சிலை கிட்ட போய் சொல்லு..."
          மாணிக்கம்: "சொல்றேன்... சொல்றேன்... இதனால தான், எனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு... இதனால தான்... அளவான அறிவு, அறிவுக்கு ஏத்த அழகு, அழகுக்கு ஏத்த திமிரு!!! இதனால தான், எனுக்கு உன்ன ரொம்ப பிடிச்சி இருக்கு... I love you.... நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசை படறேன்"

           மாணிக்கம் சொல்லி முடித்ததும், கோவில் மண்டபத்தை விட்டு ஏதும் பேசாமல் நகர்ந்தாள்... மண்டபத்தை விட்டு வெளியே கால் வைக்கையில், இடித்தது பேரிடி, பொழிந்தது பூமழை... வெண்பா வெளியேற முடியாமல், அவனை பார்த்து வெட்கத்தில் தலை குனிந்தாள்... வான் மேகம் வாழ்த்துகள் சொன்னது வைகறை தூறல்களாய்....!!!

விடைதெரியா கேள்விகள்...

          வியக்க வைக்கும் அடுக்குமாடி குடியிருப்பு. சுற்றிலும் அழகாய் வர்ண பூச்செடிகள். உழைக்காமல் உட்க்கார்ந்து வேலை செய்துவிட்டு, உடம்பை குறைப்பதற்காக நத்தைபோல் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருக்கும் கூட்டம் ஒருபுறம். தன் வீட்டுவேலை செய்யாது, முதுகுவலி, மூட்டுவலி என்று, நடைவாசலில் விடைதேடும் கூட்டம் ஒருபுறம். அதிகாலை என்பதை அறியாமல், போர்த்திதூங்கும் சோம்பேறிகள் கூட்டம் ஒருபுறம்.
           நடுத்தர மக்களின் சொந்தவீடு கனவை தகர்த்து விட்டு, பணக்கார வர்கத்தை கூட்டு சேர்க்கும் முயற்சியில், கட்டுமான தொழிலதிபர்கள் கண்ட கனவு குழந்தை இந்த பகட்டான அடுக்குமாடி குடியிருப்புகள். ஆனாலும் அவர்கள் முயற்சி வெற்றிபெறவில்லை. அங்கேயும் ஏழைகளுக்கு ஓர் இடமிருந்தது காலத்தை கடத்த. வீட்டுக்காரனாய் அல்ல, அவர்களுக்கு வேலைக்காரனாய். எவர் வாசல் என்று தெரியாது, முழுவதுமாய் சேர்த்து, முறைவாசல் செய்து போகவும்; கையாடல் பணத்தை, களவாடியின் கைகளிலிருந்து காவல் காத்து, வாசலில் கால்கடுக்க நிற்கவும். இவைகளை ஒளிந்திருந்து கண்ட, மறைந்திருந்த சூரியன் மெதுவாய் எழுந்தான், இரு கட்டிடங்களுக்கு மத்தியில்.
         சூரியன் ஒவ்வொரு வீட்டு சன்னலின் வழி எட்டிப்பார்த்து, தூங்குவோர்களை எழுப்பிக்கொண்டிருந்தான் வெப்ப சலனத்தில். ஆனால் ஓர் வீட்டில் மட்டும் அவனுக்கு வேலையில்லாமல் போயிற்று. அவனை மகிழ்விக்க சுப்ரபாதம் ஒளித்து கொண்டிருந்தது. ஆம் அது தான் நங்கையின் வீடு. நங்கை என பெயர் கொண்ட மங்கை அவள். சங்ககாலத்தில் பிறந்திருந்தால், கபிலர் குறிஞ்சிப்பாட்டில் கூறிய 99 பூக்களுடன் இவளையும் சேர்த்து நூறென உரைத்திருப்பான். சமகாலத்தில் பிறந்ததால், முடியாமல் போயிற்று. சூரிய நமஸ்காரம் செய்ய கதவை திறந்து உபரிகையில் நின்று மெல்ல வணங்கினாள், இறைவனை.
          நங்கை 'Infosys' நிறுவனத்தில்  நிரலர் பணிபுரிகிறாள். கைநிறைய சம்பளம். இருமுறை வெளிநாட்டு பயணத்தில் கிடைத்த வருவாயில், வாங்கிய வீட்டில் தன் பெற்றோருடன் வசித்து வருகிறாள். அன்று ஞாயிற்று கிழமை. தன்  பெற்றோருக்கு தேநீர் கொடுத்துவிட்டு, தானும் ஒருகையில் தேநீருடன், மறுகையில் தினமலரை புரட்டினாள், அப்பாரதி கண்டிலா புதுமைப்பெண்.
         மணி காலை 10. வீட்டிலிருந்து உடனே வெளியே புறப்பட்டாள். முகத்தில் ஒரு புதுவித தெளிவு. அருகிலிருக்கும் பூங்காவிற்கு வர சொன்னான் சஞ்சய். சஞ்சய், நங்கையுடன் பணிபுரிகிறான். பிறந்தது, படித்தது, வளர்ந்தது அனைத்தும் கிராமம் தான். நாகரிகம் என்பது, பண்பாட்டுடன் கூடிய பரந்த மனப்பான்மை என்பதில் மிக உறுதியாய் இருப்பவன். நங்கையின் வரவை எதிர்பார்த்து, காத்திருந்தான் பூங்காவின் மரத்தடியில். புதிதாய் தன காதலை சொல்வதர்க்கல்ல. சில வருடத்திற்கு முன்னர், தான் சொல்லிய காதலின் விடையை அறிந்துபோக. நங்கை தன் 'scooty'யை, நிறுத்திவிட்டு, முன்னோக்கி நடந்தால், அவனைப் பார்த்துக்கொன்டே. கைநிறைய வருமானம் இருந்தாலும், இரு கண்ணாடி வளையலை கைகளில் மோதவிட்டு, நேர்த்தியான தன நடைக்கு மெல்லிய பின்னணி இசை அமைத்தவள் நங்கை:-) வெறும் நடை, உடையை கண்டு வந்ததில்லை அவன் காதல். மருந்திற்கு கூட, அடுத்தவரின் ஏளன பேச்சுகளை பேசியதில்லை அவள். தனக்காக வேண்டி, எப்படியும் வாழலாம் என்று பொதுவாக மக்கள் என்னும் வேளையில், தனக்கென ஓர் வரையறை வைத்து வாழ்பவள் அவள். நவநாகரிக உலகில், மேற்கத்திய போதையில், நடை உடையை தொலைத்துவிட்ட சிலருக்கு மத்தியில், நங்கையை கண்டு அவன் மயங்கியதில் ஆச்சர்யமில்லை. 
          நங்கை எதிரே வருவதை கண்டு, சிறு புன்னகையுடன் எழுந்தான் அவன்.
சஞ்சய்: ஹெலோ, பாத்து ரொம்ப நாளாச்சு, நல்ல இருக்கியா?
நங்கை: yeah,  நல்ல இருக்கேன், நீ எப்டி இருக்க...?
சஞ்சய்: Am fine. So, thanks for coming.
நங்கை: சொல்லு, என்ன திடீர்னு வரசொன்ன?
சஞ்சய்: நீ என்ன idea ல இருக்க?
நங்கை: நீ எதுவும் நினைக்காத, நான் ஒரு ideaலயும் இல்ல.
சஞ்சய்: எப்ப உன்னோட கல்யாணம்...?
நங்கை: சீக்கிரமா இருக்கும். வீட்ல பாப்பாங்க. உனக்கு?
சஞ்சய்: பாக்கணும். இப்ப இல்ல.
நங்கை: நீ உன் வீட்ல பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ. அட்வைஸ் பண்றேன்னு நெனைக்காத.
சஞ்சய்: நீ final  லா என்ன சொல் வர?
நங்கை: எனுக்கு இந்த காதல் எல்லாம் நம்பிக்கையே இல்ல, also எனுக்கு அதுல ஒரு ஐடியா வும் இல்ல.
சஞ்சய்: நான் உன்ன love பண்ண சொல்லல. என்ன Marriage பண்ணிக்க சொல்றேன்.
நங்கை: உன்மேல எந்த தப்பும் இல்ல. leave it. இது நடக்காது.
   என்று சொல்லிவிட்டு, அவனை தாண்டி நடக்க தொடங்கினாள், நங்கை.  உடன், 
சஞ்சய்: நங்கை, wait. 
     அவள் திரும்பாமல்,அப்படியே நின்றாள்.
சஞ்சய்: உனுக்கு பிடிச்சா தானே Marriage கு ok சொல்லபோற. Its ok. என்ன பிடிக்கலங்குரத, harsh ஆ சொல்லாத, உன்னோட culture  தான், எனுக்கு உன்ன ரொம்ப புடிக்க காரணம். Sorry for troubling  you. நீயாவது சந்தோஷமா இரு.
   
          இருவரும் சில நொடி மௌனமாய் ஒருவரை ஒருவர் பாராமல் நின்றனர். பின், நங்கை மெதுவாய் தன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றாள். அவனோ, சில மணிநேரம் மௌனமாய் அங்கேயே அமர்ந்தான்.
   
          புதியன முயன்று வசீகரிக்க தவறியதாய், தோற்றவனை காலம் குறைகூறும். ஆனால், அவனொன்றும் நடிகனில்லை, வேடம் தறித்து களவாட.  ஏனெனில், வேடம் கலைந்ததும், எண்ணம் மாறிவிடும். மாற்றங்களை காண துடிக்கும் கண்களுக்கு, காட்சிகளின் எளிமை புரியாது போனது, முற்றிலும் விந்தையே! புதியன கேட்க விழையும் செவிகளுக்கு உரக்க சொல்வது ஒன்று மட்டுமே, நாளொருவண்ணம் நடிகனாய் வாழ்பவன், தொடர்ந்திட முடியாது ஓர்நாள் தோற்றுப்போவான். இயல்பாய் வாழ்ந்திட வழிவகுக்கும் தோல்வியும், ஒருவகை வெற்றியே! இவாறான பலவகை எண்ணங்கள் அவன் மனதில், சங்கமிக்க தொடங்கியது.
          தந்தையின், தாயின், அளவற்ற அன்பில், கட்டுண்ட பெண்கள் மனதை வெளிப்படையாய் சொல்லிட வழியில்லை. தன்னைப்பற்றி தாய் என்ன நினைப்பாரோ? தந்தை என்ன நினைப்பாரோ? என்ற அச்சத்தில் சுயகௌரவ  விலங்கினை உடைத்தெறிந்து,  பிடித்தவனை கரம்பிடிக்கும் சுதந்திரம் என்றைக்கும் நம் நாட்டில் பெண்ணிற்கு இல்லை. அதனால் தானோ? அவர்தம் மனதினை தாழிட்டு வைத்துள்ளனர்.இவைகளை எண்ணிக்கொண்டே, நங்கையும், வீட்டினை அடைந்தாள்.
           மாற்றங்கள், மட்டுமே மெய்யென என்னும், இவ்வுலகில், இவ்விருவரின் மனதும் மாறாதிருப்பது, மாற்றத்தினை பொய்யென்று உணர்த்திடுமோ?. இருமனம் சேரும், திருமண சடங்கை, வீட்டின் கௌரவ தேரில் ஏற்றியவன் யாரோ? அறம் என்ற கயிற்றில், காதலை தவறென்று கட்டிபோட்டவன் யாரோ? அடுத்தவர் கதை பேசும் வீணர்களின், ஏளன பேச்சுக்கு அஞ்சி சமூகத்தில் காதல் திருமணத்தை தவறென்று உரைத்தவன் யாரோ? மானுட வாழ்வின், அன்பென்ற ஒப்பற்ற விடையை தொலைத்துவிட்டு, விடைதெரியா பற்பல கேள்விகளுடன், வெற்றிடம் இல்லா வினாத்தாளாய் நிற்கிறது இவிருவரின் காதல்...

திங்கள், 24 மார்ச், 2014

தவிப்பு!!!

நீ யாரென யாரென தவிக்கிறேன்!
ஒரு வெற்று திரையினை ரசிக்கிறேன்!
கடல் வானம் நீளம் யாவிலும்,
புது காதல் வர்ணம் பார்க்கிறேன்...
அடி உன்னால் எந்தன் இரத்தம் 
எல்லாம் நீலம் நீலம்...
உன் பெயரை எழுதி படித்து 
பார்த்தேன் நாளும் நாளும்...
இது புதிதாய் வெய்த சாலையா?
நம் பயணம் காதல் ஜுவாலையா???
உன்னால் இந்த, மகரந்த மாற்றம்,
நெஞ்சில் இன்று ஏனோ ஏனோ???
உன்பார்வை தினம் தினம்,
என்னைகொல்லும் கூர்வாள் தானோ???

வியாழன், 20 மார்ச், 2014

பிறந்தநாள் வாழ்த்துகள்!

அகராதியில் இல்லை,
அந்தாதியில் இல்லை,
உனைவாழ்த்திட தமிழில்,
உகந்த சொல்லேதுமில்லை...
பிறகெப்படி நானுனக்கு,
வாழ்த்துரைப்பேன் 
என்அற்புத தமிழ்மகளே!!!

செவ்வாய், 18 மார்ச், 2014

அடையாளம்!!!

காலடிகள் தெரிகின்ற,
செங்காட்டின் பாதைகள்,
தேடலின் அடையாளம்...
கைரேகை அழித்திட்ட,
மண்வெட்டி கைப்பிடிகள்,
உழவனின் அடையாளம்...

கன்னத்தில் காய்ந்திட்ட,
கண்ணீரின் சுவடுகள்,
காதலின் அடையாளம் :( :( :(
விறகோடு எரிகின்ற,
சடலத்தின் சாம்பல்கள்,
மரணத்தின் அடையாளம் :( :( :(

உழைக்கின்ற கரமெல்லாம்,
ஏழ்மையில் இறந்திட்டால்,
நேர்மையின் அடையாளம்!!!
இல்லார்க்கு எப்போதும்,
ஈகின்ற செங்கரங்கள்,
கருணையின் அடையாளம்!!!

வீழ்கின்ற போதெல்லாம்,
வேர்பிடித்து எழுந்திட்டால்?
முயற்சியின் அடையாளம்...
எந்நாட்டில் வாழ்ந்தாளும்,
பண்பாட்டை காத்திடுவர்,
நன்மனிதர் அடையாளம்!!!

எக்குலத்தில் பிறப்போரும்,
எம்குலமென வாழ்பவர்கள்,
பெருமையின் அடையாளம்...
சொல்கின்ற பொருளெல்லாம்,
பிழையின்றி புரிந்திட்டால்,
நற்கவிதையின் அடையாளம்!!!

சனி, 22 பிப்ரவரி, 2014

தூக்குமேடை!

கழுத்தை, முத்தமிட 
காத்திருந்த கயிற்றுக்கு 
அவனிரு கைகளும் 
கால்களும் இமைகளும் 
இதழ்களும் ஒருசேர 
நடனமாடி, உயிர்விட்டு 
விடைபெற்றது 
தூக்குமேடையில் இருந்து...

வீழ்வேனென்று நினைத்தாயோ?

விதையென, மழையென,
மண்ணில் புதைந்திட 
வீழ்ந்தால் வீழ்வோம்...
மரமென, நதியென,
மலைத்திடும் புயலென 
மறுமுறை, எழுவோம்...
எழுந்திடும் அலையென, 
இசைத்திடும் இடியென 
பலமுறை, வருவோம்...
எதிர்த்திடும் பகைதனை,
எமனிடம் இட்டு
செல்வோம் வெல்வோம்...

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

திருமண வரவேற்பு !!!

இளையவன் கரம்பற்றி,
துணையென நிற்கிறான்...
இனியவள் இவளென,
இசைமீட்டி வருகிறாள்...
எதிர்வரும் காலத்தில்,
இணைந்திட முயல்கிறோம்!
இனிய இத்தருணத்தில்,
வாழ்த்திட கேட்கிறோம்!
சொந்தங்கள் ஆயிரம் 
படைசூழ நின்றாலும்,
நண்பரின் முகம்தனை,
எம்கண்கள் தேடிடும்!!!