ஞாயிறு, 8 டிசம்பர், 2013

முகமூடி!

உன்விழிகள் போதும்,
நானுனை கண்டுகொள்ள...
திரையிட்டு மறைத்திடு,
உன்சிரித்த முகத்தினை...
பலநெஞ்சங்கள் தடம்புரளாது,
பிழைத்து போகட்டும்...

வெள்ளி, 8 நவம்பர், 2013

நட்பு!!! (my 100!)

இதுவரை நீயாரோ,
இதுவரை நான்யாரோ,
எதுவரை செல்வோம் என்று 
யார்தான் சொல்வாரோ?

அறிமுகம் செய்தோமே,
அறிந்திட முனைந்தோமே,
மறைந்திடும் காலம் வரையில்,
மாறாதிருப்போமே...

ஒருகணம் முறைத்தோமே,
மறுகணம் சிரித்தோமே,
இயற்கையின் விதி இதுவென்று,
நடப்பில் கலந்தோமே!

உறவென வளர்ந்தோமே,
உயிரிலே கலந்தோமே, 
துன்பமும் நட்பினைத் தொடர்ந்தால்,
தோளில் அணைப்போமே! 

யுகங்களாய் தொடர்வோமே,
புதுவிதி செய்வோமே,
நட்பிலே காதல் என்ற,
களையை எடுப்போமே!

செவ்வாய், 29 அக்டோபர், 2013

சோகம்!

sorry girls... I shouldn't have written this...
ஒரு வார்த்த, அவபேச,
என் கனவும் கலைஞ்சி போச்சி...
என் மனசில், முன்ன இருந்த,
ஒருவானவில் வெளுத்து போச்சு...
ஏண்டிநீயும், முன்னால வந்த?
எதுக்குஎன்ன, கொண்டாடி கவுத்த???
மனசுக்குள்ள, பூகம்பம் வெடிக்க,
கையவிட்டு, கண்சிமிட்டி போறாடா....

அவனெனப்பு, இப்ப வெறுப்பு,
நாந்தண்ணியில மெதக்குறேன் மீனா???
கண்ணமூடி, கண்டகனவு,
பெருமழையில செத்துப்போன மானா???
அம்மியில அரளிய அரைச்சா...
மயக்கத்துக்கு, மருந்துனு கொடுத்தா...
விழுங்கியதும் கழுத்தையும் நெரிச்சா...
கல்லறையில் என்னதள்ளி பொதச்சாடா...

திங்கள், 28 அக்டோபர், 2013

உரையாடல்...

'அ'னைத்து வார்த்தையும் 
'ஆ'சைப்பட்டு எழுதினேன்...

'இ'வை போதாதென,
'ஈ'கையுடன் எழுதென்றாய்,
'உ'ரக்கச் சொல்லி,
'ஊ'க்கம் தந்து...

'எ'வ்வாறு என 
'ஏ'க்கத்துடன் கேட்டேன்,
'ஐ'யம் கொண்டு...?

'ஒ'ழுக்கமுடன் எழுதென,
'ஓ'ங்காரமாய் சொன்னாய்,
'ஔ'வைத் தமிழ்கொண்டு...

திங்கள், 21 அக்டோபர், 2013

அனாதை...

ஆணின் பெண்ணின் இச்சை,
கொஞ்சம், எச்சம், ஆகிபோனதா...?
எச்சமிங்கு உயிரும் பெற்று,
குப்பை, மேட்டில், வீழ்ந்ததா...? 
ஆக்கும் கடவுள் அறியாபிழையில்,
பூத்த, பூவும், நீயடா... 
அகிலம் யாவும் உன்னைபோலே,
வாழ்ந்து காட்ட யாரடா...?
அஞ்சி அஞ்சி வாழும்,
நெஞ்சிற்கு, எந்நாளும்,
அஞ்சாமை அழகு...
விட்டு ஓடும் துன்பம், 
பின்னாளில், இந்நாளில்,    
கல்லாமை விலகு... 

சொந்தபந்த படைகள் சூழ,
பூமி, வந்த, மானிடா...
சொந்தம்போல காத்து நிற்பது,
கையும், காலும், தானடா...
கண்ணில்வந்த நீரின் காரனம், 
கண்ணின், இமைகள், நீந்தவா...?
விடியல் வரும் நாளைஎண்ணி,
துணிந்து, நீயும், வாழ்ந்துவா...
எட்டி எட்டி பார்க்கும்,
இன்பங்கள், துன்பங்கள்,
பொய்யான நினைப்பு...
குற்றம் குறை கூறும்,
சுற்றத்தை, எந்நாளும்,
நீ தீயில் கொளுத்து... 

அவள்...

யார் நீ யாரடி...?
செந்தீ நீ தானடி...
யார் நீ யாரடி...?
பூமேனி தானடி...
Polish செய்த Granite போல 
உன் கண்கள் மின்ன...
ஒரு பார்வை பார்க்க எந்தன் 
நெஞ்சம் ஏதேதோ பண்ண...
எனை சத்தமின்றி, சலவை செய்யாதே...
இதழ் எச்சில் நீரில், தீயை மூட்டாதே...!!!

வியாழன், 17 அக்டோபர், 2013

மயக்கம்...

ஆலமர நிழலுல, கோலிகுண்டு ஆடயில,
அந்தியில கூவுங்குயில், ஒசையொன்னு கேக்கயில,
அக்கரையில் பொன்னுஒண்ணு, தண்ணிகொண்டு போகும்போது,
இக்கரையில் பாத்தஎன்ன, அலைவந்து தாக்குதடி...
அவயாரோ??? அவயாரோ???    
அவபாக்க, குளிர் தீயோ???
சாயங்காலம் கண்ணடிச்ச, சூரியன சாச்சவளோ???
சாஞ்சிபுட்ட சூரியன, கண்ணுக்குள்ள வெச்சவளோ??? 
கத்திபார்வை என்னகொல்ல, கண்சிமிட்டி பாப்பவளோ?
ஆசைப்பட்டு நானும்பேச, காணாதேசம் போனவளோ???

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

தேடல்...

விடியும் விடியும் என்று 
விடியல் தேடி வந்த 
இளைய மனது ஒன்று 
உடைகிறதே...
உடைந்து வடிந்து வரும் 
உயிரின் உதிர சத்தம்,
செவிகள் கேட்க நெஞ்சம்,
பதர்கிறதே...
விழுது விழுதுவென,
விழுந்து காத்து விட,
கிளைகள் முகங்களில் வேர்,
எழுகிறதே...
அழுது அழுது கண்கள்,
முகமும் சிவந்து விட,
வடிந்த புணலில் அனல்,
பறக்கிறதே...
முடியும் முடியும் என்று,
முயன்று பார்க்க மனம்,
இழந்த தேடல் தனை,
தொடங்கியதே...

புதன், 11 செப்டம்பர், 2013

தமிழ்க்குழந்தை!!!

அம்மா என்ற சொல்லுல தானே,
உயிரும் மெய்யும் இருக்குது...
'Mummy' என்று கூப்பிடத்தானே,
அம்மா மனசு துடிக்குது...
அப்பா என்று சொல்லத்தானே,
வாயும் மெல்ல தெறக்குது...
'Daddy' என்று கூப்பிட்டாதான் ,
அப்பா முகமோ சிரிக்குது...
'அ ஆ இ ஈ' 
தவழுற நாவுல,
'A B C D' நடக்குது...
தனியார் பள்ளியில்,
படித்தவர் தமிழோ?
மருத்துவமனையில் கெடக்குது...

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

ஒழுக்கம்!!!

வீட்டில் 
செய்யாததை,
வெளியில்
செய்யாதே...

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

முருகன்...

பிறைநுதல் தனில்,
இமை விரிந்திட,
பொறி விழுந்தது,
விழி வழியில்...

சுடர் குளிர்ந்திட,
மனம் துதித்திட,
கரு பிறந்தது,
மலர் மடியில்...

கிராமிய காதல்!!!

செம்மறிய கட்டிபுட்டு,
செங்கடல தின்னுகிட்டு,
வாரான், அவன் வாரான்...
சண்டித்தனம் செஞ்சிபாக்க,
சப்பமூக்கி கம்பெடுத்து,
வாரா, அவ வாரா...

நத்தஒன்னு தூக்கம்கெட்டு,
நெனஞ்சிட ஓட்டவிட்டு,
வருதே, வருதே...
சீண்டிப்பாக்க ஆசைப்பட்ட,
நண்டுஒன்னு தொல்லைஇப்ப,
தருதே, தருதே....

அம்மாடியோ காதல் தானா???
ஊரறிஞ்ச சேதி தானா???
எங்கேபோய் முடியும்??? தெரியலையே...
காடும் மேடும் பதிலே சொல்லலியே...

புதன், 7 ஆகஸ்ட், 2013

அடிமைக்கூட்டம்...

செங்கற் சூளை போல,
பலநாளா வயிறு காயும்...
சேவக்கூவும் நேரம் எங்க,
கண்ணு மெல்ல சாயும்...
ஆண்ட வீட்டில் அடிமைப்பட்டு,
கேப்பக்களி தான் மிச்சம்...
அத கருப்பச்சாமி கேட்டுபுட்டா,
முதுகுல வயிறு முட்டும்...
சங்கு கழுத்துல கத்திப்பார்த்தேன்,
சாமிகாது கேக்கலடா....
பூமியில் பொறந்த போறப்ப எண்ணி,
சாவும் இப்ப வெலகுதுடா...

செம்மண் சாந்து பூசி,
பட்டகாயம் மெல்ல ஆறும்...
செந்நெல் சோறு பொங்க,
கேப்பச்சட்டியும் கெஞ்சும்...
கொட்டிலில் அடைச்ச காளை கூட,
கோவப்பட்டா சீறும்...
கூனிக்குறுகி வாழுங்கூட்டம்,
எப்பநெஞ்ச நிமிரும்...
வீழ்ந்தாகூட வீரந்தாண்டா,
தோளுல துண்ட ஏத்துங்கடா...
முதுகுல சுமந்த மூட்டைய எறக்கி,
தலையில எழுத்த மாத்துங்கடா....

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

ஆதிவாசி!!!

இந்த காடே எங்கவீடு,
இதில் காட்டு எல்லைக்கோடு...
பிரிச்சி பாக்குற பழக்க வழக்கம்,
ஆதிவாசிக்கு இல்லையடா...
பட்டா போட்ட நெலத்துல வாழ,
பாவி மனசு பதறுதடா...
வவுத்து பசிய போக்க இங்க,
தேனும் திணையும் இருக்குதுடா...
தப்பு தண்டா செய்யச் சொல்லுற,
பசிதான் வத்தி கெடக்குதடா...

இது ஆதியில் பொறந்த கூட்டம்,
ஆதாம் ஏவாள் போட்ட தோட்டம்,
சாதியும் சமையமும் எங்களுக்கில்ல,
காடே எங்க சாமியடா...
பாட்டன், பூட்டன், சொல்லித்தந்தது,
மண்ணு, மானம், வீரமடா...
பேரப்புள்ளைங்க, பழகிப்பாத்தது,
வில்லும், வேலும், கம்புமடா...
உங்க தோட்டா கொண்டு மாரதொளப்பது,
எப்படி வீரம் ஆகுமடா...???

ஏட்டு  கல்வி எதுக்கு...???
இந்தக்காடே பள்ளியா  இருக்கு...
ஒவ்வொரு நாளும் பாக்குற விசயம்,
மனசுல பாடமா பதியுதடா...
நாட்டுல பொறந்த நரிங்க கூட்டம்,
காட்டபிரிப்பது சூழ்ச்சியடா....
காட்டுல மேட்டுல திரியுரகூட்டம்,
களைச்சி போனது இல்லையடா...
இந்த காட்ட விட்டு வாழநெனச்சா,
கனவிலும் உசுரு போகுமடா...
எங்க கனவிலும் உசுரு போகுமடா...

கடல்!!!

ஓடிக்
களைத்து 
நின்ற  
நதிகளின் 
வியர்வை 
துளிகள்!!!

சிவம் !!!

நீரின்றி பயிரெல்லாம் காய்கின்ற போது,
கங்கைதர சடையவிழ்த்து ஈசனாய் வா வா...
துன்பத்தில் துயரத்தில் அழைக்கின்ற போது,
ஏழைக்கண்ணீரை துடைத்துவிட ருத்ரனாய் வா வா...
சர்வத்தில் சகுனிகளின் ஆட்டத்தை வீழ்த்த,
மூவுலகம் காக்கின்ற முக்கண்ணா வா வா...
அசுரர்கள் அழிக்கின்ற இனமொன்றை காக்க,
புதுவில்லேந்தி போர்புரிய புலியாக வா வா...
இருபாலர் உலகுக்கு சமமென்று காட்ட,
ஒருபாதி உமையாகி அர்த்தனாய் வா வா...
சவமாகி இடுகாட்டில் எரிகின்ற போது,
என்சாம்பலள்ளி பூசிக்கொள்ள சங்கரா வா வா...
அகிலத்தின் மாயையில் அகப்பட்ட என்னை,
அரணாகி ஆட்கொள்ள சிவமாகி வா வா...
அழைக்கின்றேன் வா வா!!!

ஞாயிறு, 23 ஜூன், 2013

தலையணை!!!

உனக்காக நான் வடித்த,
கண்ணீர் துளிகளை,
எனக்காக ஏற்று  கொண்டது,
என் தலையணை,
ஏதுமறியாத இரவின் மடியில்!!!

வெள்ளி, 21 ஜூன், 2013

வெட்கம் :-)

நீ வெட்கப்பட்டு 
சிரிக்கையில், 
திறையாகி, 
முகம் மறைத்த,
கூந்தலை 
பிடிக்கவில்லை,
அக்கணம்...:-)

வெட்கம்!!!

எத்தனை முறைநான்,
சிரித்திருப்பேன்,
ஆனந்தத்தில், ஆச்சர்யத்தில்...???
அனைத்தும் மறந்தது 
எனக்கு...
ஒருமுறை வெட்கத்தில் 
மலர்ந்த சிறு புன்னகையில்,
என் அக்காமகள், 
எனை பெயர்சொல்லி
அழைத்தபோது!!!

வியப்பு!!!

மழையென்று,
நனையாமல்,
மரத்தடியில்.
நீயும் நின்றாய்...
பிழையென்று,
விடைசொல்ல,
காற்றாகி 
கிளை அசைத்தாள்...
உனை முழுதும்
நனைத்திட!!!

செவ்வாய், 11 ஜூன், 2013

விதவை

சகுனத்தின் பெயர்சொல்லி,
மதிகெட்டோர் சாடிடுவார்...
சமயத்தின் பெயர்சொல்லி,
சங்கடங்கள் செய்திடுவார்...
சடங்குகளை உடைத்தெறிந்து,
சத்தியத்தில் நீ நின்றால்,
மரபுகளை உடைத்துவிட்டு
மாற்றத்தை நீ காண்பாய்,
குங்கும கறையில்லா
நிலா முகம் கொண்டவளே!!!

வெள்ளி, 7 ஜூன், 2013

கடிதம்!!!

மறந்துவிட்டாயா என்னை...???
உன் எண்ணங்களை ஏந்தி
சென்றவன் நான்...
அவள் படித்தாள்,
மனம் திகைத்தாள்,
நீ காதலன் ஆனாய்,
நான் பொக்கிஷம் ஆனேன்!!!

மறந்துவிட்டாயா என்னை...???
உன் எண்ணங்களை ஏந்தி
சென்றவன் நான்...
அவள் படித்தாள்,
மனம் துடித்தாள்,
நீ கவிஞன் ஆனாய்,
நான் கிழிந்து குப்பையானேன்!!!

காதலனையும்,
கவிஞனனையும்,
தீர்மானிப்பவன் நான்...
ஒருவன் அல்லல் படுவான்,
ஒருவன் அல்லல் படுத்துவான்
இனி மறக்காதே என்னை... :) :) :)

பரிசு!!!

தங்கையின்,
துளிர் கைகள்
தரும் முதல் பரிசு,
அண்ணனின்,
கன்னத்தில் விழும் 
முதல் அறை, 
அவை அக்கறை!!!

வியாழன், 6 ஜூன், 2013

உதவி!!!

திறமையும், வறுமையும்
நல்ல நண்பர்கள்!
திறமை வெளிப்பட,
வறுமை உதவிடும்!!!

சிந்தனை!!!

ஆயிரம் ஆண்டுகள் 
நிமிர்ந்து நிற்கும் 
கோபுரத்தை கண்டு 
வெட்கி தலை குனிந்தது,
ஓராயிரம் முறை
மழையில் அறுந்துபோன,
சாலைகள்,
சீர் செய்தவனை எண்ணி...

புதன், 22 மே, 2013

கனவு!!!

நிழல் தரும் மரமெல்லாம்
நிஜம் என்று ஆகட்டும்!
நீர் தரும் நதியெல்லாம்
கரைபுரண்டு ஓடட்டும்!
பசியென்னும் பிணிபோக்கும்
உழவெல்லாம் தழைக்கட்டும்!
விதியெனும் மதியெல்லாம்
ஒளிபெற்று தெளியட்டும்!
என்தேசம், என் மக்கள்,
நிறைவுடன் வாழட்டும்!!!

செவ்வாய், 21 மே, 2013

காகிதம்!!!


இது என் சாபமோ???
என் அன்னையை,
வெட்டி வீழ்த்த,
என்மேல் 
நெடுஞ்சாலை துறையின் 
கையொப்பம்...

திங்கள், 20 மே, 2013

வான்மழை!!!

குடை மீது காதல் கொண்டு,
மழை மேகம் கொட்டி செல்லும்,
நனைந்தாலும் குடை ஏனோ,
மண்மீது விட்டு செல்லும்!!!

வெள்ளி, 17 மே, 2013

உறக்கம்!!!

இமை ரெண்டும் ஊடல் கொண்டு,
ஓயாமல் முட்டிக்கொள்ளும்...
இரவானால் காதல் கொண்டு
மஞ்சத்தில் ஒட்டிக்கொள்ளும்...

திங்கள், 15 ஏப்ரல், 2013

தமிழ் புத்தாண்டு!!!

ஒற்றை கல்லை நட்டு வைத்து,
பொட்டு  ஒன்றை இட்டு வைத்து,
நித்தம் என்றும் தொழுது நிற்கும்,
சித்தம் கொண்ட தமிழ தமிழா...

இச்சை எல்லாம் தள்ளி வைத்து,
இன்பம் கொஞ்சம் கில்லி வைத்து,
துன்பம் தன்னை வேர் அறுத்து,
விடியல் தேடி நகர்ந்து செல்வோம்,
வா வா, துணிந்து வா...

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

முரண்


வறண்ட மனதிற்கு
பசுமைதர வெளியே 
வந்தாய்...
உன்பாதச்சுவடுகள் பார்த்து
மேகங்கள் தடுமாறி 
முட்டிக்கொண்டது,
வறண்ட பூமியில் 
சற்றே உன் 
பாதங்களை பதியவை,
அவையும் உயிர்பெறட்டும்,
உன்பெயர் சொல்லி...

கைதி

உன் பெயரை
வாசிப்பதே
குற்றமோ...?
சிந்திக்க முடியா,
கற்பனை கைதி
ஆகிவிட்டேன்.
மன்னிப்பாயா...?

மௌனம்

கடல்அலை வந்து,
கரை கரைத்திடும்,
நேரம்...
எந்தன் மனஅலை,
உந்தன் பெயர்சொல்லிவிட்டு,
போகும்...
கைபேசியில்,
நீ பேசிட,
முன்னின்று,
நான் வந்தால்,
மௌனம்...???

காவிரி

காவிரியை 
கண்டது 
மனிதக்குரங்கு...
பல்லாயிரம் 
வருடம் கடந்து
மனிதனாய் 
நாகரிகம் கண்டது,
நீருக்கு 
சண்டையிடவோ...?
சிந்திப்போம்...